திருத்தந்தை பதினான்காம் லியோ பெயரில் புதிய “நிலைத்தன்மை பதக்கம்”
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
அமெரிக்காவின் வில்லனோவா பல்கலைக்கழகம் மற்றும் அதன் நிலைத்தன்மை அலுவலகம் இணைந்து, நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தில் சிறப்பான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியவர்களை கௌரவிக்கும் வகையில் “ திருத்தந்தை பதினான்காம் லியோ நிலைத்தன்மை பதக்கம்” (Pope Leo XIV Sustainability Medal) என்ற புதிய சர்வதேச விருதை நிறுவியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நீதி, பாதிக்கப்படக்கூடிய மக்களின் நலன் மற்றும் இயற்கை, பொருளாதார வளங்களின் பொறுப்பான பராமரிப்பை ஒருங்கிணைத்து செயல்படுபவர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அகுஸ்தீனியப் பல்கலைக்கழகமான வில்லனோவா, தொழில்நுட்பச் சாதனைகளை மட்டும் அல்லாது, ஒருங்கிணைந்த சூழலியல் (Integral Ecology) அணுகுமுறையையே மதிப்பீட்டின் மையமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், நிலையான மற்றும் சமத்துவமான உலகை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இந்தப் பதக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
அக்டோபரில் நடைபெறும் நிலைத்தன்மை மாநாடு
முதல் திருத்தந்தை பதினான்காம் லியோ நிலைத்தன்மை பதக்கம், 2026 அக்டோபர் 12 முதல் 15 வரை, “பூமியின் கதறலுக்கும் ஏழைகளின் கதறலுக்கும் பதிலளித்தல்” என்ற கருப்பொருளில் நடைபெறும் வில்லனோவா அனைத்துலக நிலைத்தன்மை மாநாட்டின் போது, காஸ்தல் கந்தோல்ஃபோவில் திருத்தந்தை அவர்களால் வழங்கப்படும்.
இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், திருஅவை பிரதிநிதிகள், அறக்கட்டளைகள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை தலைவர்கள் உள்ளிட்ட ஏறக்குறைய 300 பேர் பங்கேற்கின்றனர். கலந்துரையாடலிலிருந்து செயல்முறை ஒத்துழைப்பிற்குச் செல்லும் நோக்கத்துடன் இந்தப் பல்துறை மாநாடு நடத்தப்படுகிறது.
முதல் பதக்கத்தைப் பெறுபவரின் பெயர் 2026 செப்டம்பரில் அறிவிக்கப்படும். விருது வழங்கும் விழா காஸ்த ல் கந்தோல்ஃபோவில் உள்ள போர்கோ லவ்தாத்தோ சி (Borgo Laudato Si’) வளாகத்தில் நடைபெறும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வில்லனோவா பல்கலைக்கழகத்தின் தலைவர் அருட்தந்தை பீட்டர் எம். டோனஹ்யூ, OSA அவர்கள், “நமது பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதும், ஒருவரை ஒருவர் அக்கறையுடன் கவனிப்பதும் பிரிக்க முடியாதவை என்ற ஆழமான நம்பிக்கையை இந்தப் பதக்கம் பிரதிபலிக்கிறது” என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பொதுநலனையும் முன்னேற்றும் தலைவர்களை கௌரவிப்பதன் மூலம், உலகம் முழுவதும் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த மாற்றத்தை ஊக்குவிக்க விரும்புகிறோம்” என்றும் கூறினார்.
வில்லனோவா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்
திருத்தந்தை பதினான்காம் லியோ, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு ராபர்ட் எப். பிரெவோஸ்ட் என்ற பெயரில் அறியப்பட்டவர். அவர் 1977ஆம் ஆண்டு வில்லனோவா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளநிலை அறிவியல் (B.Sc.) பட்டம் பெற்றார். பின்னர், 2014ஆம் ஆண்டு அதே பல்கலைக்கழகம் அவரது சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி மனிதநேயத் துறையில் கௌரவ முனைவர் (Honorary Doctor of Humanities) பட்டத்தை வழங்கியது.
இந்த விருது , உலகளாவிய நிலைத்தன்மை முயற்சிகளையும் ஒருங்கிணைந்த சூழலியலையும் ஊக்குவிக்கும் பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும். இது வில்லனோவா அனைத்துலக நிலைத்தன்மை மாநாட்டின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சித் திட்டத்தில் இடம்பெறும்.
2026ஆம் ஆண்டுக்கான முதல் விருதிற்கான பரிந்துரைக்கப்பட்டவர்களை, பல்கலைக்கழகத்தின் நிலைத்தன்மை தலைமைத்துவக் குழு (Sustainability Leadership Council) ஆய்வு செய்து தேர்ந்தெடுத்துள்ளது.
படைப்பைப் பாதுகாப்பதும் மனித மாண்பை உயர்த்துவதும் ஒன்றோடொன்று இணைந்தவை
2026ஆம் ஆண்டுக்கான இந்த அனைத்துலக மாநாடு, உரோமிலுள்ள பேட்ரிஸ்டிகம் (Patristicum) மற்றும் காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள லவ்தாத்தோ சி உயர்கல்வி மையம் (Laudato Si’ Center for Higher Education) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கான திருப்பீட அலுவலகம் (Dicastery for Promoting Integral Human Development) மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் நிறுவிய லவ்தாத்தோ சி உயர்கல்வி மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இம்மையம், இறைவா உமக்கே புகழ் திருமடலின் ஊக்கத்தால் ஒருங்கிணைந்த சூழலியல் உருவாக்கம், நிலைத்தன்மைக் கல்வி மற்றும் அதனைச் சார்ந்த முயற்சிகளை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.
லவ்தாத்தோ சி உயர்கல்வி மையத்தின் தலைமை இயக்குநர் கர்தினால் ஃபாபியோ பாஜ்ஜியோ அவர்கள் இந்த முயற்சியை வரவேற்று, படைப்பைப் பாதுகாப்பதும் மனித மாண்பை மேம்படுத்துவதும் பிரிக்க முடியாதவை என்பதை தங்கள் வாழ்வால் சாட்சியப்படுத்துபவர்களை இந்த விருது கௌரவிக்கிறது என்றும், அவர்களின் எடுத்துக்காட்டு, பூமியின் கதறலுக்கும் ஏழைகளின் கதறலுக்கும் நம்பிக்கையுடன் பதிலளிக்கும் ஒருங்கிணைந்த சூழலியலை எதிர்காலத் தலைமுறைகள் தழுவ ஊக்கமளிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
