கிறிஸ்துவின் ஒளியாக உலகில் பிரகாசிக்க ஈராக் இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உலகிற்கு கிறிஸ்துவின் ஒளியை எடுத்துச் செல்லும் திருஅவையின் பணியில் இளைஞர்கள் இணைந்து செயல்பட்டு, எதிர்கால திருஅவையையும் உலகையும் உருவாக்க வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
ஈராக்கின் எர்பில் உயர்மறைமாவட்டத்தின் அங்காவா நகரில், ஜூலை 8 முதல் 11 வரை நடைபெறும் ஆண்டு இளைஞர் சந்திப்பில் பங்கேற்றுள்ள இளைஞர்களுக்கு வழங்கிய காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, "கிறிஸ்துவின் ஒளியாக உலகில் பிரகாசிக்கவும், நம்பிக்கையின் தூதுவர்களாக வாழவும்" அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
"பணி" என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்வாண்டு இளைஞர் சந்திப்பில், திருஅவையின் வாழ்விலும் எதிர்காலத்திலும் இளைஞர்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றனர் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
மேலும், "இளைஞர்கள் திருஅவையின் எதிர்காலம் மட்டுமல்ல, அதன் நிகழ்காலமும் ஆவர்" என்று குறிப்பிட்ட திருத்தந்தை, போர் மற்றும் அரசியல் நிலையற்ற சூழலை தொடர்ந்து அனுபவித்து வரும் ஈராக் கிறிஸ்தவர்களின் சவாலான வாழ்க்கையை எடுத்துக்காட்டினார்.
உலகில் ஒளியாக இருப்பது எப்போதும் எளிதல்ல. இருப்பினும் அஞ்சாதீர்கள்; நீங்கள் தனியாக இல்லை" என்று கூறிய திருத்தந்தை, "நான் உங்களுடன் இருக்கிறேன்; திருஅவையும் உங்களுடன் இருக்கிறது. இயேசுவின்மீது நம்பிக்கை வையுங்கள்" என்று இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.
கிறிஸ்தவ வாழ்வை வடிவமைக்கும் மூன்று முக்கிய பண்புகளாக நம்பிக்கை, அன்பு மற்றும் எதிர்நோக்கு ஆகியவற்றை எடுத்துரைத்த திருத்தந்தை, இறைவார்த்தை, தினசரி செபம், ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் நற்கருணை ஆகியவற்றின் வழியாக கிறிஸ்துவுடன் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் இறைவனின் அன்பில் உங்கள் இதயங்களை ஆழமாக வேரூன்றச் செய்யுங்கள் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, கிறிஸ்துவின் இதயத்தை அறிந்து, அவர்மீது உங்கள் வாழ்வை உறுதியாகக் கட்டியெழுப்ப அஞ்சாதீர்கள்" என்றும் வலியுறுத்தினார்.
நல்லிணக்கமும் நிலையான அமைதியும் நிலவ வேண்டும் என்று ஏங்கும் ஈராக் சமூகத்தில், இளைஞர்கள் அமைதியை உருவாக்குபவர்களாகவும், உயிர்த்தெழுந்த ஆண்டவரிடமிருந்து வரும் நம்பிக்கையின் சாட்சிகளாகவும் விளங்க வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, இளைஞர்கள் அனைவரையும் திருஅவையின் அன்னையான மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்த திருத்தந்தை, "இறைவனின் நன்மையில் ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஆண்டவர் வைத்திருக்கும் திட்டத்திற்கு அஞ்சாதீர்கள். அவர் உங்களுக்கு நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தை அருள விரும்புகிறார்" என்று உற்சாகமூட்டும் செய்தியை வழங்கி தனது காணொளிச் செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
