தேடுதல்

புனித பூமி, உகாண்டா, இத்தாலியைச் சேர்ந்த 164 சிறார்களைக் கொண்ட ABF Voices இசைக்குழுவுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ புனித பூமி, உகாண்டா, இத்தாலியைச் சேர்ந்த 164 சிறார்களைக் கொண்ட ABF Voices இசைக்குழுவுடன் திருத்தந்தை பதினான்காம் லியோ  (@Vatican Media)

இசை மனித வாழ்வை இறைவனை நோக்கி வழிநடத்தும் அருள்கொடை: திருத்தந்தை

காஸ்தல் கந்தோல்போவில் இடம் பெற்ற “அமைதியின் புகழ்ப்பாடல்” செப நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இசை மனித இதயங்களை இறைவனை நோக்கி உயர்த்துகிறது என்று வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இசை மனித இதயங்களை இறைவனை நோக்கி உயர்த்தும் ஓர் அருள்கொடை என்றும், அது பல்வேறு குரல்களை இசையொற்றுமையில் ஒன்றிணைத்து, அமைதி, சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பு நிறைந்த உலகை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என்றும் திருத்தந்தை  பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூலை 29, புதனன்று, காஸ்தல் கந்தோல்போவில் உள்ள திருத்தந்தையரின் தோட்டத்தில் அமைந்துள்ள போர்கோ லவ்தாத்தோ சி மையத்தில் இடம்பெற்ற “அமைதியின் புகழ்ப்பாடல்” (Canticle of Peace) என்ற செப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, விண்ணக ஒற்றுமை இறைவனைத் தியானிப்பதிலிருந்து பிறக்கிறது என்றும், இசையின் அழகு மனிதரை “அழகின் முழுமையான ஆதாரமாகிய இறைவனை” சந்திக்க அழைக்கிறது என்றும் கூறினார்.

புனித பிரான்சிஸ் அசிசியின் மறைவின் 800ஆம் ஆண்டு நினைவு விழாவையொட்டி, ஆன்ட்ரேயா போசெல்லி அறக்கட்டளை இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆன்ட்ரேயா போசெல்லி மற்றும் உகாண்டா, புனித பூமி, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 164 சிறார்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட ABF Voices Choir குழுவினருடன் கலந்து கொண்ட திருத்தந்தை, இளைஞர்கள் தங்களுக்குக் கடவுள் வழங்கிய திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையின் உண்மையான அர்த்தமும் மகிழ்ச்சியும் ஆண்டவரிடம்தான் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், இளைஞர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் நாடுகளுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாக உறுதியளித்த திருத்தந்தை, வன்முறையால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமைதி நிலவ சிறப்பு இறைவேண்டலும் மேற்கொண்டார்.

கல்வி மற்றும் இசை வழியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு ஆதரவளித்து வரும் ஆன்ட்ரேயா போசெல்லி அறக்கட்டளையின் பணியைப் பாராட்டிய திருத்தந்தை,  அது மனித மாண்பையும், முழுமையான மனித வளர்ச்சியையும், பொதுநலனையும் மேம்படுத்தும் திருஅவையின் பணிக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

பல மொழிகளில் சிறுவர்கள் ஒப்புவித்த அமைதிக்கான செபம், ஆண்டவர் கற்பித்த செபம், திருத்தந்தையின் திருத்தூது ஆசீர், மற்றும் “அமேசிங் கிரேஸ்” பாடலுடன் இந்நிகழ்வு நிறைவுற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

30 ஜூலை 2026, 13:16