புலம்பெயர்ந்தோருக்கு உதவிய லம்பேதூசாவுக்கு திருத்தந்தையின் நன்றி புலம்பெயர்ந்தோருக்கு உதவிய லம்பேதூசாவுக்கு திருத்தந்தையின் நன்றி  (ANSA)

புலம்பெயர்ந்தவர்களிடம் காட்டிய கருணைக்காக லம்பெடுசா மக்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை

மத்திய தரைக்கடல் தீவான லம்பெடுசாவிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

மத்திய தரைக்கடல் தீவான லம்பெடுசாவிற்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் போது, அங்குள்ள மக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அவரை வாழ்த்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களிலும், திறந்தவெளி திருப்பலியிலும் திரளாகப் பங்கேற்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக தங்கள் இடங்களில் தஞ்சமடைந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுடன் தளராத ஒற்றுமையை வெளிப்படுத்தி வரும் அத்தீவில் குடியிருக்கும் 6,000 மக்களுக்கும் திருத்தந்தை தனது நன்றியைத் தெரிவித்தார்.

துன்பத்தில் தவித்த புலம்பெயர்ந்தோரை தங்களின் சகோதர, சகோதரிகளாக அரவணைத்து உதவிய லம்பெடுசா மக்களைப் பாராட்டிய திருத்தந்தை, தங்களின் துயரங்களுக்கிடையிலும் ஒருவருக்கொருவர் கரம் நீட்டி ஒற்றுமையுடன் வாழ்ந்த புலம்பெயர்ந்தோரின் சான்று வாழ்வையும் எடுத்துக்காட்டினார்.

இத்தாலியின் மைய நிலப்பகுதியை விட துனிசியாவிற்கு மிக அருகில் அமைந்துள்ள லம்பெடுசா தீவு, போர், ஒடுக்குமுறை மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஓடிவரும் மக்களின் முக்கிய நுழைவாயிலாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தத் தீவில் தரையிறங்கியுள்ளனர். இதில் 2023 ஆம் ஆண்டின் ஒரே வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10,000 பேர் ஏதிலிகளாக இத்தீவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகள் மிகவும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை அமல்படுத்தி வரும் இவ்வேளையில், லம்பெடுசா மக்கள் தொடர்ந்து நம்பிக்கை மற்றும் சகோதரத்துவத்தின் சான்றுகளாக விளங்க வேண்டும் என்று திருத்தந்தை அவர்கள் வலியுறுத்தினார்.

பிரிவினைகளைக் கடந்து, இயற்கையைப் பேணுதல், சமூக நட்பு மற்றும் மனித மாண்பு ஆகியவை ஒன்றிணைந்து செயல்படும் ஒரு சமுதாயத்தைத் தொடர்ந்து கட்டமைக்க அவர் அவர்களை ஊக்குவித்தார். இது உலகிற்கே ஒரு கருணையின் முன்மாதிரியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூலை 2026, 12:32