திருத்தந்தை பதினான்காம் லியோவின் திருமடல் Magnifica humanitas திருத்தந்தை பதினான்காம் லியோவின் திருமடல் Magnifica humanitas  (AFP or licensors)

செயற்கை நுண்ணறிவு மனிதகுல நலனுக்குச் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை

ஜெனீவாவில் நடைபெறும் "AI for Good Global Summit" மாநாட்டை முன்னிட்டு அனுப்பிய செய்தியில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், செயற்கை நுண்ணறிவு மனித மாண்பையும் பொதுநலனையும் மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

செயற்கை நுண்ணறிவு (AI) மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான கேள்விகளை எழுப்பும் இக்காலகட்டத்தில், மனித மாண்பையும் பொதுநலனையும் பாதுகாக்கும் வகையில் புதிய பாதைகளைத் தேட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 7 முதல் 10 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் "AI for Good Global Summit" மாநாட்டை முன்னிட்டு திருத்தந்தையின் சார்பாக திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பிய செய்தியில்,  இவ்வாறு திருத்தந்தை  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU), ஐ.நா. அமைப்புகள் மற்றும் சுவிட்சர்லாந்து அரசு இணைந்து நடத்தும் இம்மாநாடு, செயற்கை நுண்ணறிவு உலகை எவ்வாறு மாற்றி வருகிறது என்பதையும், உலகளாவிய சவால்களுக்கு அதன்மூலம் தீர்வுகளை எவ்வாறு காணலாம் என்பதையும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் எதிர்காலம் தொடர்பான மிக முக்கியமான கேள்விகளை எழுப்பும் இந்த வரலாற்றுச் சந்திப்பில், திருப்பீடம் உரையாடலுக்கும் ஒத்துழைப்புக்கும் எப்போதும் திறந்த மனதுடன் இருப்பதாக திருத்தந்தை உறுதியளித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் காலத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து வெளியிடப்பட்ட மகத்தான மானுடம் (Magnifica Humanitas) என்ற திருமடல், மனிதகுலத்தின் பொதுநலனையும், அனைவருக்கும் மாண்பான வாழ்க்கையையும் மேம்படுத்தும் புதிய வழிகளைத் தேடும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள், பொறியாளர்கள், அரசியல் தலைவர்கள், பொதுப்பணியாளர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் அனுபவங்களையும் கருத்துகளையும் கவனமாகக் கேட்டறிந்த பின்னரே இந்த திருமடல் உருவானதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அல்காரிதம்களின் தவறான பயன்பாடு, செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் முடிவெடுக்கும் சுதந்திரம் பாதிக்கப்படுவது போன்ற கவலைக்குரிய அம்சங்களும் இந்த திருமடலை உருவாக்கத் தூண்டியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதகுலத்திற்கு சேவை செய்யும் நோக்கில் நடைபெறும் இம்மாநாட்டின் கலந்துரையாடல்கள் பயனுள்ளவையாக அமைய வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, அந்த முயற்சிகளுக்காகத் தமது செபங்களையும் உறுதியளித்து செய்தியை நிறைவு செய்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

09 ஜூலை 2026, 12:35