அமெரிக்கா மீதான தனது ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்திய திருத்தந்தை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
அமெரிக்காவின் மீதான தனது ஆழ்ந்த பாசத்தையும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வருபவர்களை வரவேற்கும் அந்நாட்டின் நீண்டகால மரபையும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பாராட்டியுள்ளார்.
வத்திக்கானில் இடம்பெற்ற அமைதிக்கான செப நிகழ்வுக்குப் பிறகு NBC ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, தான் உலகளாவிய திருஅவைக்கு சேவை செய்ய வந்தபோதிலும், அமெரிக்காவிலிருந்து தேர்வான முதல் திருத்தந்தை என்ற வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதாகவும், "தான் அடிப்படையில் அமெரிக்கராகப் பிறந்த ஒரு திருத்தந்தை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது தாத்தா பாட்டி அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தவர்கள் என்றும், தனது தாயார் வழியினர் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் அடிமைகளின் உரிமையாளர்களாகவும் இருந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இவ்வனுபவங்கள் அமெரிக்காவின் செழுமையானதும் சிக்கலானதுமான வரலாற்றைப் பிரதிபலிப்பதாக திருத்தந்தை எடுத்துக்காட்டியுள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும், இருப்பினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ திட்டங்கள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
Telemundo ஊடகத்திற்கு அளித்த மற்றொரு நேர்காணலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் வழிநடத்திய அமைதிக்கான செப நிகழ்வை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மனிதர்கள் வேறுபாடுகளைக் கடந்து, இறைவனின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் உணர்ந்து, வெறுப்பும் மோதல்களும் நிறைந்த உலகை அல்லாது அமைதி நிறைந்த உலகை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
புலம்பெயர்ந்த மக்களுக்கு விடுத்த செய்தியில், அவர்கள் நம்பிக்கையை இழக்காமல், பொறுப்புணர்வுடன் வாழ்ந்து, தாங்கள் வாழும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இறுதியாக நீதியும் அமைதியும் நிலவும் உலகை உருவாக்குவதற்கு துணிவு, நம்பிக்கை, ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வு ஆகியவை இன்றியமையாத அடித்தளங்களாக விளங்குகின்றன என்றும் வலியுறுத்தி நேர்காணலை திருத்தந்தை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
