போரால் துன்புறுவோரை மறந்துவிடாதீர்கள்: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
"போர் காரணமாக துன்புறுவோரையும் உயிரிழப்போரையும் நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும், அமைதிக்காக மேற்கொள்ளப்படும் தாராளமான முயற்சிகளுடன் நமது இடைவிடாத இறைவேண்டல்களையும் இணைப்போம்" என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஜூலை 19 , ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டு வரும் உலகின் பல்வேறு நாடுகளுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருவதாக தெரிவித்தார்.
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, தெற்கு ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்கள், அதற்குப் பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, காஸ்தல் கந்தோல்போ மக்களுக்கும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திருத்தந்தை, செனகோலோ சமூகம், பொக்கோலாரே இயக்கத்தின் புதிய குடும்பங்கள் இயக்கம், APRA கோடைக்காலப் பயிற்சியில் பங்கேற்ற மெக்சிகோ மாணவர்கள், மற்றும் Catholic Worldview Fellowship குழுவினருக்கு சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ரெக்னும் கிறிஸ்தி இயக்கத்தின் இளம் உறுப்பினர்களையும், சிட்னி துணை ஆயர் அந்தோணி பெர்சி அவர்களின் தலைமையில் "தி லயன் பில்கிரிமேஜ்" திருப்பயணத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய திருப்பயணிகளையும் அன்புடன் வரவேற்றார்.
இறுதியாக, உலகம் முழுவதும் அமைதி நிலவுவதற்காக இடைவிடாது இறைவேண்டல் செய்யவும், அமைதியை உருவாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடவும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
