துறவற குழும வாழ்வு புனிதப்படுத்தலின் ஊற்று: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பொருளாதார வளங்கள், ஆன்மிக அனுபவங்கள், திருத்தூதுப் பணியின் இலட்சியங்கள் மற்றும் பிறரன்புப் பணிகளைப் பகிர்ந்து வாழ்வதன் வழியாக, உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மறைவான பிரசன்னம் சமூக வாழ்வில் வெளிப்படுகிறது என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள ஃபீனிக்ஸ் நகரில், ஜூலை 20 முதல் 23 வரை நடைபெற்று வரும் 2026 தேசிய மாநாட்டில், அமெரிக்க ஆண் துறவற சபைத் தலைவர்கள் மாநாடு (CMSM) தனது 70-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறது. இந்நிகழ்வையொட்டி திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"கிறிஸ்துவில் ஒன்றாய்: இன்றைய துறவறச் சமூக வாழ்வு" என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில், அமெரிக்காவிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் கப்ரியேலே காச்சியா அவர்கள், திருத்தந்தை அவர்களின் வாழ்த்துக் கடிதத்தை வாசித்தார்.
அமெரிக்காவில் ஆண்களுக்கான கத்தோலிக்கத் துறவறச் சபைகள், துறவற மடங்கள் மற்றும் திருத்தூதுப் பணிச் சங்கங்களின் தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அமைப்பாக CMSM செயல்பட்டு வருகிறது.
ஜூலை 16ஆம் நாள், மாநாட்டின் செயல் இயக்குநர் அருள்பணி பிராங்க் டோனியோ அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த எழுபது ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆண் துறவறச் சபைகளிடையே ஒத்துழைப்பை வளர்த்ததற்காக, இறைவன் வழங்கிய அருள்கொடைகளுக்கு நன்றிசெலுத்த வேண்டிய நேரம் இது என்று திருத்தந்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உரையாடலுக்கான வாய்ப்புகளை உருவாக்கி, துறவறச் சமூகங்களின் தலைமைத்துவத்திற்கு ஆதரவளித்த அவர்களின் பணியைப் பாராட்டிய திருத்தந்தை, இந்த முயற்சிகள் திருத்தூதுப் பணிக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த துறவற ஆண்களின் சான்று வாழ்வை வலுப்படுத்தியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் மாநாட்டுப் கருப்பொருளை குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, துறவறக் கூட்டு வாழ்வை வெறும் அமைப்பாகப் பார்க்காமல், அது நம்மைப் புனிதப்படுத்தும் இடமாகவும், நற்செய்திப் பணிக்கு ஊக்கமும், சாட்சியமும், ஆற்றலும் தரும் ஊற்றாகவும் கருத வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார வளங்கள், ஆன்மிக அனுபவங்கள், திருத்தூதுப் பணியின் இலட்சியங்கள் மற்றும் பிறரன்புப் பணிகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து வாழ்வதன் வழியாகவே, உயிர்த்தெழுந்த ஆண்டவரின் மறைவான பிரசன்னம் வெளிப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த சிந்தனை, உரையாடல் மற்றும் இறைவேண்டலின் நாட்கள், ஒவ்வொரு துறவறச் சபையினுள்ளும், அவற்றுக்கிடையிலும் சகோதரத்துவ ஒற்றுமையை ஆழப்படுத்துவதற்கான வழிகளை அறிந்துகொள்ள உதவும் என்றும், அதன்மூலம் அவர்கள் பணியாற்றும் அனைத்துச் சமூகங்களிலும் திருத்தூதுப் பணிகளிலும் கிறிஸ்துவுக்கு ஒன்றுபட்ட, மகிழ்ச்சியான, உண்மையான சான்று வாழ்வைத் தொடர்ந்து வழங்க இயலும் என்ற நம்பிக்கையையும் திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக, திருஅவையின் அன்னையாகிய புனித கன்னி மரியாவின் பரிந்துரையில் இம்மாநாட்டை ஒப்படைத்து, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து துறவறச் சபைகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கி செய்தியை திருத்தந்தை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
