தேடுதல்

மொன்டேகாச்சினோவில் புனித பெனடிக்ட் கல்லறையில் திருத்தந்தை மொன்டேகாச்சினோவில் புனித பெனடிக்ட் கல்லறையில் திருத்தந்தை  (@Vatican Media)

மொன்டேகாச்சினோவில் புனித பெனடிக்ட் கல்லறையில் உலக அமைதிக்காக இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை

திருத்தந்தை பதினான்காம் லியோ, இத்தாலியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மொன்டேகாச்சினோ மடாலயத்திற்கு தனிப்பட்ட முறையில் வருகை தந்து, புனித பெனடிக்ட் அவர்களின் கல்லறையில் உலக அமைதிக்காக இறைவேண்டல் செய்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 20, திங்களன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இத்தாலியின் புகழ்பெற்ற மொன்டேகாச்சினோ (Montecassino) மடாலயத்திற்கும் அங்குள்ள துறவியர் இல்லத்திற்கும் தனிப்பட்ட முறையில் வருகை புரிந்தார்.

திருத்தந்தை புனித பெனடிக்ட் அவர்களின் கல்லறையில் செபித்து, “இரத்தப்பொழிவும் மோதல்களும் நிறைந்த உலகின் பல பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும்” என்று இறைவேண்டல் செய்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

அதன்பின், அங்குள்ள துறவியர் இல்லத்தினருடன் மதிய உணவைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, தற்போது கோடை ஓய்வுக்காக தங்கியுள்ள காஸ்தல் கந்தோல்ஃபோவிற்கு திரும்பிச் சென்றார். அவர் ஜூலை 27 வரை அங்கு ஓய்வில் இருப்பார்.

மொன்டேகாச்சினோ மடாலயம்

உரோமிலிருந்து ஏறத்தாழ இரண்டு மணி நேரப் பயண தூரத்தில் அமைந்துள்ள மொன்டேகாச்சினோ, புனித பெனடிக்ட் அவர்கள் கி.பி. 529-ஆம் ஆண்டு நிறுவிய பெனடிக்டின் துறவற சபையின் முதல் மடாலயமாகும்.

இரண்டாம் உலகப்போரின் போது, 1944 பிப்ரவரி 15 அன்று நடைபெற்ற மொன்டே காச்சினோ போரில், ஜெர்மன் படைகள் அங்கு தங்கியிருப்பதாக தவறாக நம்பிய நேச நாடுகளின் விமானத் தாக்குதலால் மடாலயம் பெருமளவில் அழிந்தது. பின்னர், இத்தாலி அரசின் நிதியுதவியுடன் அது மீண்டும் கட்டப்பட்டு, 1964ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது.

இன்று, அங்கு சிறிய பெனடிக்டின் துறவியர் சமூகம் வாழ்ந்து வருகிறது. உலகம் முழுவதிலிருந்தும் வரும் திருப்பயணிகளையும் பார்வையாளர்களையும் அந்த மடாலயம் வரவேற்று வருகிறது.

போரில் உயிர்நீத்தோரின் நினைவிடங்கள்

மடாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள காச்சினோ போர் நினைவிடத்தில், கல்லறைகள் கண்டறியப்படாத 4,000-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் வீரர்களின் நினைவு போற்றப்படுகிறது. அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள 289 பேரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அதேபோல், அருகிலுள்ள போலந்து போர் நினைவிடத்தில், 1944 மே மாதம் மொன்டேகாச்சினோவை கைப்பற்றும் போரில் உயிரிழந்த 1,072 போலந்து வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கல்லறைகளில் காணப்படும் கிறிஸ்தவ சிலுவைகளும் தாவீதின் நட்சத்திரங்களும், போரில் உயிர்நீத்தவர்களின் சமயப் பல்வகைமையை வெளிப்படுத்துகின்றன.

'அமைதியின் தூதர்' விருது

இரண்டாம் உலகப்போரில் இடிபாடுகளாக மாறி, போரின் அழிவை நினைவூட்டும் அடையாளமாகத் திகழும் இந்த மொன்டேகாச்சினோ மடாலயத்திலேயே, பத்து நாட்களுக்கு முன்பு 2026ஆம் ஆண்டிற்கான “பாசிஸ் நூன்சியுஸ்” (Pacis Nuntius – அமைதியின் தூதர்) விருது, எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பித்சபாலா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

21 ஜூலை 2026, 12:52