தேடுதல்

2026.06.13 Rosary

போர்களை முடிவுக்குக் கொண்டுவர மனித மனங்களில் இறை இரக்கம் மலர வேண்டும்!

"இறைவனின் இரக்கம் மட்டுமே மனித இதயங்களில் உண்மையான சகோதரத்துவத்தை மலரச் செய்யும்."

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

போர்களும் மோதல்களும் நிறைந்த உலகில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக இறை இரக்கத்தையும் மனமாற்றத்தையும் நாட வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

லொம்பார்டி மாநிலத்தின் லோடி மறைமாவட்டத்தில் இடம்பெற்ற 27-ஆவது புனித கொலம்பானுஸ் நாள் விழாவையொட்டி, திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பிய செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்.

போர் ஏற்படுத்தும் மரணம் மற்றும் அழிவை மேலும் அதிகரிப்பது குற்றச்சாட்டுகளே என்றும், மனித இதயங்களை மாற்றி, எதிரிகளுக்குக்கூட சமாதானக் கரம் நீட்டச் செய்வது இறைவனின் இரக்கம் மட்டுமே என்றும் திருத்தந்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

புனித கொலம்பானுஸ் நினைவு விழா, பல ஆண்டுகளாக ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருஅவை மற்றும் குடிமைச் சமூகங்களை ஒன்றிணைத்து, அவரது ஆன்மீகப் பாரம்பரியத்தையும் கிறிஸ்தவ விழுமியங்களையும் மீண்டும் கண்டறிய உதவி செய்து வருவதை திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

மேலும், புனித கொலம்பானுஸ் உண்மையான நல்லிணக்கத்திற்குத் தேவையான மனமாற்றத்தின் முன்மாதிரியாக விளங்குகிறார் என்றும், போர்கள் வெடிக்கும் சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, இறைவனின் இரக்கத்தை மன்றாடும் மனப்பான்மையே அமைதிக்கான உண்மையான பாதை என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, அண்மையில் லோடி பகுதியில் புனித ஃபிரான்சிஸ் சேவியர் கப்ரினிக்கு மரியாதை செலுத்திய தனது திருத்தூதுப் பயணத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு அழைப்பு விடுத்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூலை 2026, 13:01