தேடுதல்

திரித்துவத் திருத்தலத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ வருகை திரித்துவத் திருத்தலத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ வருகை  (@Vatican Media)

திரித்துவத் திருத்தலத்திற்கும் பெனடிக்டைன் மடங்களுக்கும் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை!

கோடைக்கால ஓய்விற்காக காஸ்தல் கந்தோல்ஃபோவில் தங்கியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஜூலை 22 அன்று வால்லெபியெத்ராவில் உள்ள திரித்துவத் திருத்தலத்திற்கும், சுபியாக்கோவில் உள்ள புனித பெனடிக்ட் மற்றும் புனித ஸ்கொலாஸ்திக்கா துறவற மடங்களுக்கும் எதிர்பாராத வகையில் பயணம் மேற்கொண்டார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கோடைக்கால ஓய்விற்காக காஸ்தல் கந்தோல்ஃபோவில் தங்கியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஜூலை 22, புதன்கிழமை காலை, எதிர்பாராத வகையில் வால்லெபியெத்ராவில் அமைந்துள்ள திரித்துவத் திருத்தலத்திற்கும், பின்னர் சுபியாக்கோவில் உள்ள புனித பெனடிக்ட் மற்றும் புனித ஸ்கொலாஸ்திக்கா துறவற மடங்களுக்கும் சென்று இறைவேண்டல் செய்தார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்ட தந்திச் செய்தி தெரிவித்துள்ளது.

மத்திய இத்தாலியின் லாசியோ மற்றும் அப்ரூஸ்ஸோ பகுதிகளின் எல்லையில், மவுண்ட் ஆட்டோரே (Mount Autore) மலையின் பாறைகளுக்குள் அமைந்துள்ள திரித்துவத் திருத்தலத்தை முதலில் திருத்தந்தை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாக்கப்பட்டுள்ள திரித்துவ ஆண்டவரின் புனித சுவர் ஓவியத்தின் முன் அமைதியாக இறைவேண்டல் செய்த திருத்தந்தை, பின்னர் அங்கு கூடியிருந்த திருப்பயணிகளையும் துறவறச் சமூகத்தினரையும் சந்தித்து வாழ்த்தினார்.

கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 1,800 மீட்டர் உயரத்தில், மொந்தி சிம்ப்ரூயினி (Monti Simbruini) மலைத்தொடரில் அமைந்துள்ள இத்திருத்தலம், தூய ஆவியானவர் திருவிழா மற்றும் ஜூலை 26ஆம் நாள் கொண்டாடப்படும் புனித அன்னம்மாள் திருநாளின் போது ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் கொடிகளுடன் நடைபயணமாக வந்து தரிசிக்கும் புகழ்பெற்ற புனிதத் தலமாகும்.

திருத்தலத்தின் இயற்கைக் குகையில் காணப்படும் தொன்மையான சுவர் ஓவியங்களில், பைசாந்தியக் கலைப்பாணியில் கிறிஸ்துவின் ஒரே உருவம் மூன்று முறை சித்தரிக்கப்பட்டுள்ள திரித்துவ ஆண்டவரின் ஓவியம் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. மேலும், திருத்தலத்தின் படிக்கட்டுகளின் அடிவாரத்தில், பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள புனித அன்னம்மாளின் சிற்றாலயமும் திருப்பயணிகளின் பக்தியை ஈர்த்து வருகிறது.

புனித பெனடிக்ட் துறவற மடத்தில் செபம்

வால்லெபியெத்ரா திருத்தலப் பயணத்திற்குப் பிறகு திருத்தந்தை அவர்கள், சுபியாக்கோ நகருக்குச் சென்று புனித பெனடிக்ட் துறவற மடத்தை பார்வையிட்டார்.

அங்கு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித பிரான்சிஸின் சுவரோவியத்தின் முன் சில நிமிடங்கள் அமைதியாக தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, புனித பெனடிக்ட் வாழ்ந்ததாகக் கருதப்படும் புனிதக் குகையில், மரபுப்படி அவரது திருவுருவச் சிலையின் முழங்காலில் முத்தமிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களுடன் சேர்ந்து விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்ற செபத்தை செபித்தார்.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக, இந்த மடமும் புனிதக் குகையும் பெனடிக்டைன் ஆன்மீகத்தின் மிக முக்கிய மையங்களில் ஒன்றாக மதிக்கப்பட்டு வருகின்றன. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பாலைவனத் துறவியரின் வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு புனித பெனடிக்ட் இக்குகையில் தனிமை வாழ்வு மேற்கொண்டார். அக்காலத்தில் அவர் வளர்த்த ஆன்மீக அனுபவமும் இறையழைப்பும், பின்னர் முதல் துறவறச் சமூகங்களை நிறுவுவதற்கும், மேற்கு உலகின் துறவற வாழ்வின் அடித்தளத்தை அமைப்பதற்கும் வழிவகுத்தன.

புனித ஸ்கொலாஸ்திக்கா மடத்தில் மதிய உணவு

அதனைத் தொடர்ந்து திருத்தந்தை புனித ஸ்கொலாஸ்திக்கா துறவற மடத்திற்குச் சென்று, பெனடிக்டைன் துறவிகளுடன் இணைந்து மதிய உணவு அருந்தினார். பின்னர் மடத்தின் உள்முற்றங்களையும் மற்ற பகுதிகளையும் பார்வையிட்டார்.

இறுதியாக, இந்தப் பயணத்தை நிறைவு செய்த திருத்தந்தை, பின்னர் தனது கோடைக்கால இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவிற்கு திரும்பிச் சென்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

23 ஜூலை 2026, 12:51