நீதி, அமைதி, அன்பின் திருஅவையாக இருக்க திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
நீதி, அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் திருஅவையாக விளங்குமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
ஜூலை 11, சனிக்கிழமையன்று, காஸ்தல் கந்தோல்ஃபோவில் உள்ள போர்கோ லவுதாத்தோ சி (Borgo Laudato si') வளாகத்தில் இடம் பெற்ற "திருத்தந்தையுடன் மதிய உணவு" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, "நான் தயாரிக்கப்பட்ட உரையுடன் வரவில்லை; ஆனால் நீதி, உண்மையான அன்புப்பணி மற்றும் அனைவரையும் வரவேற்கும் திறந்த மனமுடைய திருஅவைக்கான தாகத்துடன் வந்துள்ளேன்" என்று கூறினார்.
ஏறக்குறைய 200 பேர், அதில் 40-க்கும் அருகிலான குழந்தைகள் மற்றும் பாதிப்புக்குள்ளான சூழலில் வாழும் குடும்பங்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், "திருத்தந்தை" என்ற பட்டம் "பாலங்களை உருவாக்குபவர்" என்பதைக் குறிக்கிறது என்றும், வறுமை மற்றும் அநீதியின் காரணங்களை நீக்கும் நீதிமிக்க சமுதாயத்தை உருவாக்க அனைவருடனும் பாலங்களை அமைக்க திருஅவை அழைக்கப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வன்முறை, வெறுப்பு மற்றும் பாகுபாடுகளால் சிதைந்திருக்கும் இன்றைய உலகில், ஒற்றுமை, ஒருவரையொருவர் அரவணைக்கும் மனப்பான்மை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், "நீதி, அமைதி, அன்பின் திருஅவையாக இருப்போம்" என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் கர்தினால் ஃபாபியோ பாஜியோ தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டதுடன், போர்கோ லவுதாத்தோ சி வளாகத்திற்கு வழிகாட்டும் சுற்றுப்பயணமும் இடம்பெற்றது. இறுதியில், பங்கேற்றோர், அவர்களின் குடும்பங்கள் மற்றும் துன்புறுவோர் அனைவருக்காக இறைவேண்டல் செய்து, திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
