தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ  

வத்திக்கான் நூலகத்தில் புதிய கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார் திருத்தந்தை!

வத்திக்கான் அப்போஸ்தலிக்க நூலகத்தில் நடைபெறவுள்ள "AQVA: பேரழிவும் அதிசயமும்" என்ற புதிய கண்காட்சித் தொடரை, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் செப்டம்பர் 14 அன்று தொடங்கி வைக்கிறார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வத்திக்கான்  நூலகத்தில் நடைபெறவுள்ள "AQVA. Catastrophe and Wonder" (AQVA: பேரழிவும் அதிசயமும்) என்ற புதிய கண்காட்சித் தொடரை, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், செப்டம்பர் 14, திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார் என்று வத்திக்கான் அப்போஸ்தலிக்க  நூலகம் ஜூலை 12, ஞாயிறன்று அறிவித்துள்ளது.

இந்தக் கண்காட்சி செப்டம்பர் 25, 2026 முதல் மே 14, 2027 வரை, வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும். கண்காட்சி குறித்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று நூலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நூலகத்தின் துணை முதல்வர் அருள்பணி ஜியாகோமோ கார்டினாலி, சிமோனா டி கிரெசென்சோ, பிரான்செஸ்கா ஜியானெட்டோ, டெலியோ ப்ரோவெர்பியோ ஆகியோர் ஒருங்கிணைத்துள்ள இந்தக் கண்காட்சியில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கலைஞர் JR, அமெரிக்க எழுத்துரு வடிவமைப்பாளர் பில் மோரன், இத்தாலிய சமையல் கலைஞர் ஃபுல்வியோ பியராஞ்சலினி ஆகியோரின் படைப்புகள், வத்திக்கான் நூலகத்தின் அரிய வரலாற்றுச் சேமிப்புகளுடன் இணைத்து காட்சிப்படுத்தப்படுகின்றன.

இந்தக் கண்காட்சி, நீரை ஒருபுறம் பேரழிவின் அடையாளமாகவும், மறுபுறம் உயிர் வளத்தின் ஆதாரமாகவும் சிந்திக்க அழைக்கிறது. ஒவ்வொரு கலைஞரும் தங்களது தனித்துவமான கலைப் பார்வையின் வழியாக நூலகத்தின் வரலாற்றுச் சேமிப்புகளுக்கு புதிய விளக்கத்தை வழங்கியுள்ளனர்.

திருத்தந்தையின் நூலகரும் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகப் பொறுப்பாளருமான பேரருள்திரு ஜியோவன்னி சேசரே பகாச்சி அவர்கள், திருத்தந்தையை வரவேற்பதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தக் கண்காட்சி, சமகாலக் கலை மற்றும் வத்திக்கான் நூலகத்தின் தொன்மைமிக்க பாரம்பரியம் ஆகியவற்றுக்கு இடையே புதிய உரையாடலை ஏற்படுத்தும் முயற்சி என்று எடுத்துக்கட்டினார்.

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உண்மையாக இருப்பதன் அவசியத்தை திருத்தந்தை பலமுறை எடுத்துரைத்துள்ளார் என்றும், அந்த அடிப்படையில், கடந்த காலமும் எதிர்காலமும் நண்பர்களைப் போல் சந்திக்கும் ஓர் இல்லமாக இன்றைய காலத்தை இந்தக் கண்காட்சி மாற்றும்" என்று பேரருள்திரு பகாச்சி அவர்கள் கூறினார்.

திருத்தந்தைக்கு உரிய உலகப் புகழ்பெற்ற நூலகம்

பண்டைய மற்றும் நவீன கால கையெழுத்துப் பிரதிகள், ஆவணக்காப்பகப் பொருட்கள், அச்சிடப்பட்ட தொகுதிகள், நாணயங்கள் மற்றும் பதக்கங்கள், அச்சுப் பிரதிகள் மற்றும் வரைபடங்கள், அத்துடன் வரைபடவியல் மற்றும் நிழற்படப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதன் பரந்த சேகரிப்புகள், இனம், மதம், பூர்வீகம் அல்லது கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து, உலகெங்கிலும் உள்ள தகுதிவாய்ந்த அறிஞர்கள் பயன்படுத்துவதற்காக நீண்டகாலமாக அணுகக்கூடியதாக உள்ளன.

இன, மத, மொழி, நாடு என்ற வேறுபாடின்றி, தகுதி பெற்ற ஆய்வாளர்கள் உலகம் முழுவதிலிருந்தும் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழியியல், வரலாறு, இறையியல், சட்டம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் இந்த நூலகம் சிறப்பான ஆய்வு மையமாக விளங்குகிறது.

கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலிருந்தே திருத்தந்தையரின் ஆவணக் காப்பக மரபுடன் தொடர்புடைய இந்த நூலகம், 15-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை ஐந்தாம் நிக்கோலாஸ் அவர்களால் அறிஞர்களுக்காகத் திறக்கப்பட்டது. பின்னர், 1475 ஜூன் 15 அன்று திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ் வெளியிட்ட Ad decorem militantis Ecclesiae என்ற ஆவணத்தின் மூலம், இந்நூலகம் நிலையான நிர்வாக அமைப்பைப் பெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூலை 2026, 12:50