"அமைதியின் புகழ் பாடல்" நிகழ்வில் 164 சிறார், இளையோருடன் இணையவுள்ள திருத்தந்தை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உலகின் பல்வேறு போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 164 சிறார் மற்றும் இளையோருடன் இணைந்து, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஜூலை 29ஆம் நாள், போர்கோ லவ்தாத்தோ சீ (Borgo Laudato Si’) வளாகத்தில் இடம்பெறும் "அமைதியின் புகழ் பாடல்" (Cantico di Pace) என்ற சிறப்பு செப மற்றும் இசை நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
இறைவா உமக்கே புகழ் (லவ்தாத்தோ சீ) உயர்கல்வி மையமும், ஆண்ட்ரேயா போச்செல்லி அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, புனித பிரான்சிஸ் அசிசியாரின் மறைவின் 800ஆம் ஆண்டு நினைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.
புனித பிரான்சிஸ் அசிசியாரின் "படைப்புகளின் பாடல்" (Canticle of the Creatures) என்ற இறைப்பாடலின் ஊக்கத்தால் நடைபெறும் இந்த நிகழ்வில், உலக அமைதிக்காக திருத்தந்தை அவர்கள் செபத்தை வழிநடத்தவுள்ளார். புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஆண்ட்ரேயா போச்செல்லி மற்றும் ABF Voices இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் பங்கேற்கும் பன்னாட்டு இசைக்குழுவில், புனித பூமி, உகாண்டா, ஹெய்ட்டி மற்றும் இத்தாலியைச் சேர்ந்த சிறார் மற்றும் இளையோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலர் போர், வறுமை மற்றும் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பங்கேற்பு, உரையாடல், நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் உலகளாவிய மொழியாக இசை திகழ்வதை எடுத்துக்காட்டுகிறது.
பத்து நாள்கள் இடம்பெற்ற பன்னாட்டு இசை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தின் நிறைவு நிகழ்வாக அமையும் இந்தச் சந்திப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்குழுவினர் மற்றும் இசைக் கல்வியாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
போர்கோ லவ்தாத்தோ சீ உயர்கல்வி மையத்தின் தலைமை இயக்குநர் கர்தினால் பாபியோ பாஜ்யோ அவர்கள், சந்திப்பு, கல்வி, சகோதரத்துவம் மற்றும் படைப்பைப் பாதுகாப்பதன் வழியாக அமைதியை வளர்ப்பதே இம்மையத்தின் நோக்கம் என்றும், இந்த முயற்சி அதனை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.
செப நிகழ்வின் நிறைவில், பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டின் இசைக்குழு பிரதிநிதிகளும், நன்றியுணர்வையும் நட்பையும் வெளிப்படுத்தும் வகையில், தங்கள் நாட்டின் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் கைவினைப் பரிசுகளை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களிடம் வழங்கவுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
