தேடுதல்

கோடைகால ஓய்வை நிறைவு செய்து வத்திக்கான் திரும்பிய திருத்தந்தை!

காஸ்தல் கந்தோல்போவில் 23 நாள்கள் கோடைகால ஓய்வை நிறைவு செய்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஜூலை 27 அன்று வத்திக்கான் திரும்பினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

காஸ்தல் கந்தோல்போவில் (Castel Gandolfo) அமைந்துள்ள அப்போஸ்தலிக்க மாளிகையில் 23 நாள்கள் கோடைகால ஓய்வை நிறைவு செய்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஜூலை 27 திங்கள்கிழமை மாலை வத்திக்கான் திரும்பினார்.

காஸ்தல் கந்தோல்போவிலிருந்து புறப்படும் முன், திருத்தந்தை அவர்கள், தாம் தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே திரண்டிருந்த இறைமக்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், தங்கள் குடும்பங்களுடன் வந்திருந்த குழந்தைகளுக்கு ஆசி வழங்கினார்.

வத்திக்கான் திரும்பியிருந்தாலும், ஜூலை 29, புதனன்று, மீண்டும் காஸ்தல் கந்தோல்போவுக்குச் சென்று, "அமைதியின் பாடல்" (Cantico di Pace) என்ற செப மற்றும் சகோதரத்துவ நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இறைவா உமக்கே புகழ் (லவ்தாத்தோ சீ) உயர்கல்வி மையமும், ஆண்ட்ரேயா போச்செல்லி அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் இந்நிகழ்வு, புனித பிரான்சிஸ் அசிசியாரின் மறைவின் 800ஆம் ஆண்டு நினைவாக திருத்தந்தையர் இல்லத் தோட்டங்களில் நடைபெறுகிறது.

ஜூலை 5ஆம் நாள் தொடங்கிய இந்த கோடைகால ஓய்வுக்காலத்தில், திருத்தந்தை அவர்கள் செபம், ஆன்மிக வாசிப்பு மற்றும் ஓய்வுக்காக நேரத்தை ஒதுக்கியதுடன், தமது மேய்ப்புப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார்.

மேலும், ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், காஸ்தல் கந்தோல்போ அப்போஸ்தலிக்க மாளிகையிலிருந்து நண்பகல் மூவேளை செப உரையை வழிநடத்தி, அங்கு திரண்டிருந்த இறைமக்களைச் சந்தித்து வாழ்த்தினார்.

ஜூலை 11ஆம் நாள், உரோமை மறைமாவட்டத்தைச் சேர்ந்த 35 குழந்தைகள் உட்பட சமூகத்தில் நலிவுற்ற நிலையில் வாழும் 200 பேருடன் மதிய உணவைப் பகிர்ந்து கொண்டார். ஜூலை 18ஆம் நாள் அல்பானோ மறைமாவட்டம் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தனது ஓய்வுக்காலத்தின் இறுதி வாரத்தில், மொன்டே காச்சினோ பெனடிக்டின் மடம், வல்லேபியெத்ராவில் உள்ள தூய திரித்துவ திருத்தலம், சுபியாக்கோவில் உள்ள புனித பெனடிக்ட் மற்றும் புனித ஸ்கொலாஸ்திக்கா மடங்கள் ஆகிய புனிதத் தலங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று இறைவேண்டல் செய்தார்.

காஸ்தல் கந்தோல்போவில் திருத்தந்தையின் கோடைகால தங்குதல், செபம், ஆன்மிகப் புதுப்பிப்பு மற்றும் மேய்ப்புப் பணிகளை இணைத்த ஒரு காலமாக அமைந்ததுடன், இறைமக்களுடன் அவர் தொடர்ந்து நெருக்கமாக இருப்பதையும் எடுத்துக்காட்டியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஜூலை 2026, 13:31