2025ஆம் ஆண்டு "போர்கோ லவுதாத்தோ சி" மையத்தில் ஏழை மக்களுடன் நடைபெற்ற மதிய உணவு 2025ஆம் ஆண்டு "போர்கோ லவுதாத்தோ சி" மையத்தில் ஏழை மக்களுடன் நடைபெற்ற மதிய உணவு 

ஏழைகள், அகதிகளுடன் அன்பின் விருந்தில் பங்கேற்கும் திருத்தந்தை!

காஸ்தல் கந்தோல்போவில் உள்ள போர்கோ லவுதாத்தோ சி வளாகத்தில், ஏறக்குறைய 200 ஏழைகள், அகதிகள் மற்றும் நலிவுற்றோருடன் திருத்தந்தை மதிய உணவு பகிர்ந்து கொள்ளவுள்ளார். திருப்பலியுடன் தொடங்கும் இந்த நிகழ்வு, படைப்பைப் பாதுகாப்பதும் மனித மாண்பைப் பேணுவதும் திருஅவையின் ஒரே பணியாகும் என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் ஆண்டுதோறும் நடைபெறும் கருணை முயற்சியாகும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 11, சனிக்கிழமையன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் காஸ்தல் கந்தோல்போவில் உள்ள திருத்தந்தையரின் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள போர்கோ லவுதாத்தோ சி (Borgo Laudato si') வளாகத்தில், ஏறக்குறைய  200 ஏழைகளுடன் இணைந்து மதிய உணவை பகிர்ந்து கொள்ளவுள்ளார்

"திருத்தந்தையுடன் மதிய உணவு" என்ற இந்த நிகழ்வு, படைப்பைப் பாதுகாப்பதற்கான திருப்பலி கொண்டாட்டத்துடன் தொடங்கும். அதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி, போர்கோ லவுதாத்தோ சி வளாகத்தைச் சுற்றிப் பார்வையிடுதல் மற்றும் திருத்தந்தையுடன் இணைந்து மதிய உணவு பகிர்தல் ஆகியவை நடைபெறும்.

2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக வளர்ந்துள்ளது. இதில் ஏழைகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்பவர்கள் பங்கேற்று, இயற்கையின் அழகை அனுபவிப்பதோடு திருத்தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

இந்த ஆண்டு நிகழ்வை Laudato si உயர்கல்வி மையம், பிறரன்புப் பணிக்கான திருப்பீடத்துறை மற்றும் உரோமை மறைமாவட்டம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

லவுதாத்தோ சி உயர்கல்வி மையத்தின் இயக்குநர் கர்தினால் Fabio Baggio அவர்கள் , "படைப்பைப் பாதுகாப்பதும் மனிதரைப் பாதுகாப்பதும் ஒரே திருப்பணியாகும்" என்று தெரிவித்தார்.

பிறரன்புப் பணிக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பேராயர் Luis Marín de San Martín அவர்கள், உண்மையான பிறரன்புப் பணி என்பது நெருக்கம், சந்திப்பு மற்றும் பகிர்வின் வழியாக வெளிப்படுகிறது என்று   குறிப்பிட்டார்.

உரோமை மறைமாவட்டத்தின் திருத்தந்தை பிரதிநிதி கர்தினால் Baldassare Reina அவர்கள், இந்த நிகழ்வில் பங்கேற்பவர்கள் பங்குகள், காரித்தாஸ் மற்றும் பல்வேறு திருஅவை அமைப்புகளால் தினமும் உடனிருந்து வழிநடத்தப்படும் மக்களே என்றும், இந்த சந்திப்பு சமூகத்தின் விளிம்பில் வாழும் மக்களின் மாண்பை உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு, அனைவரையும் வரவேற்கும் திருஅவையின் பணியை மேலும் வலுப்படுத்துவதாகவும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூலை 2026, 12:31