புதிய மரோனைட் அருளாளரின் பரிந்துரையால் லெபனோனுக்கு அமைதி கிடைக்கட்டும்: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
புதிய மரோனைட் அருளாளராக உயர்த்தப்பட்ட மரோனைட் தலைவர் எலியாஸ் ஹுவாயெக் அவர்களின் சான்று வாழ்வும் பரிந்துரையும் லெபனோன் நாட்டிற்கு அமைதியையும், உலகெங்கும் வாழும் மரோனைட் நம்பிக்கையாளர்களுக்கு உறுதியையும் வழங்கட்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இறைவேண்டல் செய்தார்.
ஜூலை 26, ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவில் இடம் பெற்ற நண்பகல் மூவேளை இறைவேண்டலின் இறுதியில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, 1899 முதல் 1931 வரை அந்தியோக்கியாவின் மரோனைட் திருஅவையின் தலைவராக பணியாற்றியதுடன், மரோனைட் தூய குடும்ப சகோதரிகள் சபையை நிறுவிய எலியாஸ் ஹுவாயெக் அவர்கள், ஜூலை 26 அன்று லெபனோனில் அருளாளராக உயர்த்தப்பட்டதை எடுத்துக்காட்டினார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மரோனைட் திருஅவையை அர்ப்பணிப்புடனும் ஆழ்ந்த மேய்ப்புப் பணியுணர்வுடனும் வழிநடத்திய அருளாளர் எலியாஸ் அவர்கள், "அவர் உரையாடலுக்கும் நம்பிக்கைக்கும் உரிய மனிதர்" என்றும், திருஅவை, சமூகம் மற்றும் அரசியல் வாழ்வில் ஒளிமிக்க வழிகாட்டியாகத் திகழ்ந்ததால் " நவீன லெபனோனின் தந்தை" என்று போற்றப்பட்டவர் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
புதிய அருளாளரின் பரிந்துரை உலகெங்கும் உள்ள மரோனைட் நம்பிக்கையாளர்களை எப்போதும் வழிநடத்துவதுடன், தனக்கு மிகவும் அன்பான லெபனோன் மக்களுக்கு அமைதி என்ற அருட்கொடையையும் பெற்றுத்தரட்டும் என்று திருத்தந்தை இறைவேண்டல் செய்தார்.
அருளாளர் பட்ட உயர்வு திருப்பலி
லெபனோனின் திமானே நகரில், மரோனைட் தலைமையகத்தின் கோடைக்கால மையத்தில் இடம்பெற்ற அருளாளர் பட்ட உயர்வு திருப்பலிக்கு, திருத்தந்தையின் சிறப்புத் தூதராக கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்கள் தலைமை தாங்கினார்.
திருப்பலியில் மறையுரை ஆற்றிய மரோனைட் திரு அவையின் தலைவர் கர்தினால் பெச்சாரா பௌத்ரோஸ் ராய் அவர்கள், அருளாளர் எலியாஸ் ஹுவாயெக் அவர்களை "ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் தலைவர்" என்று போற்றினார். 1916ஆம் ஆண்டின் பெரும் பஞ்ச காலத்தில் பட்டினியால் வாடிய மக்களுக்கு உதவியது, 1919ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி மாநாட்டில் லெபனோனின் இறையாண்மையைப் பாதுகாக்கப் போராடியது, கல்வி, பிறரன்புப் பணிகள் மற்றும் மரோனைட் திருஅவையின் புதுப்பிப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
மேய்ப்பரின் விழிப்புணர்வு, தலைவரின் ஞானம், தந்தையின் இதயம், புனிதரின் விசுவாசம் ஆகியவற்றை ஒருங்கே கொண்டிருந்த அருளாளர் எலியாஸ் ஹுவாயெக் அவர்கள், இன்று வரை லெபனோனை வழிநடத்தும் விசுவாசம், நம்பிக்கை மற்றும் தேசிய ஒற்றுமையின் நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார் என்று கர்தினால் ராய் அவர்கள் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
