உக்ரைனின் பெர்டிசிவ் மரியன்னை திருத்தலம் உக்ரைனின் பெர்டிசிவ் மரியன்னை திருத்தலம் 

உக்ரைன் மக்களுக்காகவும் உலக அமைதிக்காகவும் செபிக்க திருத்தந்தை அழைப்பு!

உக்ரைனில் இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையின் அமைப்புகள் மீளமைக்கப்பட்டதன் 35ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், போரால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், உலக அமைதி, குடும்பங்களின் நலன் மற்றும் இறைவனின் கட்டளைகளுக்கு உண்மையாக வாழும் அருளுக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உக்ரைனில் இலத்தீன் வழிபாட்டு முறை கத்தோலிக்கத் திருஅவையின் அமைப்புகள் மீளமைக்கப்பட்டதன் 35ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்போர் மற்றும் உயிரிழந்த விசுவாசிகள் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்யுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களை, இவ்விழாவிற்கான தனது சிறப்புத் தூதராக நியமித்து எழுதியுள்ள கடிதத்தில், ஜூலை 19 அன்று பெர்டிச்சிவ் நகரிலுள்ள தேசிய கார்மேல் அன்னை மரியா திருத்தலத்தில் நடைபெறும் விழாவை அவர் தலைமையேற்று நடத்துவார் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். அவருடன் பேரருள்திரு அந்த்ரேய் லெகோவிச் மற்றும் அருள்பணி பாவ்லோ கோமியாக் ஆகியோரும் பங்கேற்பர்.

தான் எழுதியுள்ள இக்கடிதத்தில், கி.பி. 1234-இல் திருத்தந்தை ஒன்பதாம் கிரெகோரி எழுதிய கடிதத்தை நினைவுகூரும் திருத்தந்தை, துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் உறுதியுடன் நம்பிக்கையை வாழ்ந்த உக்ரைன் கிறிஸ்தவர்களைப் பாராட்டியதுடன், இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சோவியத் ஆட்சியில் கத்தோலிக்கத் திருஅவை எதிர்கொண்ட கடுமையான துன்புறுத்தல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று உக்ரைனில் திருஅவை மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ச்சியடைந்திருப்பதையும், அதன் அமைப்புகள் மீளமைக்கப்பட்டதன் 35ஆம் ஆண்டு நிறைவையும், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் உக்ரைன் திருத்தூதுப் பயணத்தின் 25ஆம் ஆண்டு நினைவையும் கொண்டாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விழாவிற்கு தலைமை தாங்கும் பேராயர் காலகர் வழியாக, உலக அமைதி, குடும்பங்களின் நலன் மற்றும் இறைவனின் கட்டளைகளுக்கு உண்மையாக வாழும் மனப்பான்மைக்காக அனைவரும் இடைவிடாது இறைவேண்டல் செய்யுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூலை 2026, 12:41