'பாபேல் கோபுரத்தை அல்ல, ஒன்றிப்பை உருவாக்குங்கள்' என திருத்தந்தை ஆசிய ஆயர்களுக்கு அழைப்பு:
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆசியாவில் உள்ள திருஅவை "பாபேல் கோபுரத்தைக் கட்டும் கட்டிடக்கலைஞர்களாக இல்லாமல், ஒன்றிப்பை உருவாக்குபவர்களாக" உருவாக வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இறைவனைத் தங்கள் வாழ்வின் மையமாகவும், சக மனிதரைத் தங்கள் ஒவ்வொரு முடிவின் மையமாகவும் வைத்துச் செயல்படுமாறு நம்பிக்கையாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பை உயர் மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்களை, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஜூலை 20 முதல் 26 வரை நடைபெறவுள்ள ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப் பேரவைக்கு தனது சிறப்புத் தூதராக நியமித்து எழுதியுள்ள கடிதத்தில், திருத்தந்தை அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில், தமது 'மகத்தான மானுடம்' (Magnifica Humanitas, எண் 16) என்ற திருத்தூது மடலை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதில் "தங்கள் கைகளில் கறை படும்" என்ற அச்சமின்றி, ஆயர்களும் நம்பிக்கையாளர்களும் துணிவுடன் செயல்பட வேண்டும் என்று ஊக்குவித்துள்ளார்.
"அத்துடன் ஆசியாவில் உள்ள திருஅவை நம்பிக்கையிலும் மனிதநேயத்திலும் தொடர்ந்து செழித்தோங்கும்" என்ற தனது நம்பிக்கையையும் அக்கடிதத்தில் திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ளார்.
'மகத்தான மானுடம்' (Magnifica Humanitas) என்ற தனது திருத்தூது மடலில் வலியுறுத்திய கருத்துகளை மீண்டும் நினைவுபடுத்திய திருத்தந்தை அவர்கள், ஏழைகள், நோயாளிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் எளியோரே புதுப்பிக்கப்பட்ட சமூகத்தின் "மூலைக்கல்" என எடுத்துரைத்தார்.
திருப்பாடல் 85-ஐ மேற்கோள்காட்டிய திருத்தந்தை, "வலுவான மற்றும் அனைவரையும் வரவேற்கக்கூடிய ஒரு பொதுவான இல்லத்தைக் கட்டுவதற்கு அன்பும் உண்மையும், நீதியும் அமைதியும் ஒன்றாக இணைய வேண்டும்" என்றார்.
மேலும், "மற்றொரு பாபேல் கோபுரத்தை" கட்டுவதைக் கைவிட்டு, மனிதகுலம் இறைவனின் பிரசன்னத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அனைவரும் பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இறுதியாக, இந்த ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் நிறைவிறுதிப் பேரவைக் கூட்டத்தையும் கர்தினால் கிரேசியஸ் அவர்களையும் தூய கன்னி மரியா மற்றும் புனித யோசேப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்து தனது செய்தியை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
