தேடுதல்

கலை மற்றும் அழகு மனிதரை விண்ணகத்தை நோக்கி உயர்த்துகின்றன!

காஸ்தல் கந்தோல்ஃபோவில் நடைபெற்ற சிறப்பு இசைக் கச்சேரியில் பங்கேற்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அழகு, இசை மற்றும் கலை மனிதர்களின் பார்வையை விண்ணகத்தை நோக்கி உயர்த்தி, நம்பிக்கையை வளர்க்கின்றன என்று வலியுறுத்தினார். போர்களும் வன்முறைகளும் நிறைந்த உலகிலும் அழகு மனிதர்களை ஒன்றிணைத்து இறைவனின் அன்பை உணரச் செய்கிறது என்றும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் சக்தி கலைக்கு உண்டு என்றும் அவர் எடுத்துரைத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

அழகு, இசை மற்றும் கலை மனிதர்களின் பார்வையை விண்ணகத்தை நோக்கி உயர்த்தி, துன்பங்கள் நிறைந்த உலகில் நம்பிக்கையை அளிக்கின்றன என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.

ஜூலை 18, சனிக்கிழமையன்று கோடைக்கால ஓய்விற்காக காஸ்தல் கந்தோல்ஃபோவில் தங்கியிருக்கும் திருத்தந்தை அவர்களைக் கௌரவிக்கும் வகையில், அல்பானோ மறைமாவட்டம் ஏற்பாடு செய்த சிறப்பு இசைக் கச்சேரியில் உரையாற்றியபோது திருத்தந்தை, இவ்வாறு தெரிவித்தார்.

போர், வெறுப்பு, வன்முறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பல்வேறு சவால்கள் உலகை சூழ்ந்துள்ளன என்றாலும், அழகை அனுபவிக்கும் தருணங்கள் மனிதர்கள் ஒன்றிணைந்து நன்மையையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்த முடியும் என்பதை நினைவூட்டுகின்றன என்றும், இசையும் கலையும் மனித ஆன்மாவை உயர்த்தி, இறைவனின் படைப்பின் அழகை உணரச் செய்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

மேலும் "அழகு இதயத்திலிருந்து இதயத்திற்கு பயணித்து, மனிதரை இறைவனை நோக்கி உயர்த்துகிறது" என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அண்மையில் மேற்கொண்ட ஸ்பெயின் திருத்தூதுப் பயணத்தை சுட்டிக்காட்டியதுடன், அந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மக்களின் பார்வையை விண்ணகத்தை நோக்கி உயர்த்துவதே என்று  விளக்கினார்.

இந்த இசை நிகழ்ச்சியில், வயலின் கலைஞர் மார்கோ ரோக்லியானோ, பியானோ கலைஞர் ரோசானா தோமாச்சி கோல்கார், மற்றும் மாஸ்ட்ரோ பியர் கார்லோ ஒரிஸியோ தலைமையிலான "இ முசிசி டி பார்மா" இசைக்குழு, நிக்கோலோ பகனினி மற்றும் வின்சென்சோ பெல்லினி ஆகியோரின் புகழ்பெற்ற இசைப் படைப்புகளை நேர்த்தியுடன் அரங்கேற்றி, பார்வையாளர்களை இசை விருந்தில் மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய அல்பானோ ஆயர் வின்சென்சோ விவா அவர்கள்,  காஸ்தல் கந்தோல்ஃபோவிற்கு திருத்தந்தை மீண்டும் வருகை தந்ததற்காக நன்றியைத் தெரிவித்ததுடன், உலகின் பல போர் பகுதிகளில் துன்புறும் பெண்கள், தாய்மார்கள் மற்றும் குடும்பங்களுக்காக இந்த இசை நிகழ்ச்சி அர்ப்பணிக்கப்படுவதாகக் கூறி, அமைதிக்கான திருத்தந்தையின் தொடர்ச்சியான அழைப்பை மீண்டும் எதிரொலித்தார்.

இறுதியில், கலைஞர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, அழகை அனுபவிக்கும் தருணங்கள் இறைவனின் படைப்பாற்றலையும் அன்பையும் உணரச் செய்து, அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த உலகிற்கான நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூலை 2026, 07:34