தேடுதல்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் கப்பல்கள் 

போரின் மத்தியில் அமைதிக்கும் நம்பிக்கைக்கும் திருத்தந்தை அழைப்பு!

காஸ்தல் கந்தோல்ஃபோவில் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையில், மத்திய கிழக்கு, லெபனான் மற்றும் உக்ரைனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்ட திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நீதியான மற்றும் நீடித்த அமைதிக்குப் பேச்சுவார்த்தை, நேருக்கு நேர் சந்திப்பு மற்றும் தூதரக முயற்சிகளே வழி என வலியுறுத்தினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்

"போரின் காற்று" மீண்டும் வன்முறை, பயம் மற்றும் மரணத்தைப் பரப்பி வருவதாகவும், இதனால் அப்பாவிப் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தையின் கோடைகால இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவில்  தனது கோடைகால ஓய்வின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற மூவேளை செப உரையின் போது இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, மோதல் நிலவும் பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கு, லெபனான் மற்றும் உக்ரைனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அனைத்துலக சமூகம் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை, நீதியுடனும் நீடித்தும் நிலைக்கும் அமைதியை எட்டுவதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தை, நேருக்கு நேர் சந்திப்பு மற்றும் தூதரக முயற்சிகளே என்று வலியுறுத்தினார்.

மிகவும் சவாலான சூழல்களிலும் நம்பிக்கையின் ஒளியை அணையவிடாமல் காத்து வாழுமாறு உலக மக்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், ஜூலை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் 'கடல் ஞாயிறு' (Sea Sunday) நாளையொட்டி, உலகெங்கிலும் பணியாற்றும் மாலுமிகள், மீனவர்கள் மற்றும் துறைமுகத் தொழிலாளர்களை திருத்தந்தை அவர்கள் தனது ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் நினைவுகூர்ந்தார்.

குடும்பங்களை விட்டு நீண்ட காலம் பிரிந்து வாழ்வதும், கடல் வழிப் பயணங்களில் எதிர்கொள்ளும் ஆபத்துகளும் உள்ளிட்ட அவர்களின் தியாகங்களைப் பாராட்டிய அவர், உலக வர்த்தகத்தையும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் தாங்கி நிறுத்துவதில் அவர்கள் ஆற்றிவரும் அர்ப்பணிப்புமிக்க சேவையை பாராட்டி மகிழ்ந்தார்.

இறுதியாக, செஸ்டோகோவாவின் அன்னை (Our Lady of Częstochowa) திருவுருவப் படத்துடன் ஜாஸ்னா கோரா (Jasna Góra) திருத்தலத்திற்கு ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான போலந்து நாட்டின் திருப்பணிகளுக்காகவும் இறைவேண்டல் செய்து  அவர்கள் தங்கள் வாழ்வின் மூலம் மகிழ்ச்சியான மறைபரப்பு சீடர்களாகவும், நற்செய்தியின் உண்மையுள்ள சான்றுகளாகவும் விளங்குமாறு ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூலை 2026, 12:45