இறைவார்த்தை நம் இதயங்களில் பலன்தர அனுமதிப்போம்: திருத்தந்தை

கோடை விடுமுறைக் காலத்தில் இறைவார்த்தையைக் கேட்டு, வாசித்து, தியானிப்பதற்கும், அமைதி மற்றும் இறைவேண்டலுக்கு நேரம் ஒதுக்குவதற்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கோடை விடுமுறைக் காலத்தில் இறைவார்த்தையைக் கேட்பதற்கும், வாசிப்பதற்கும், தியானிப்பதற்கும், அமைதியிலும் இறைவேண்டலிலும் நேரம் ஒதுக்குமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூலை 12, ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, அந்நாளின் நற்செய்தியில் இடம்பெறும் விதைப்பவர் உவமையை (மத் 13:1–23) மேற்கோள்காட்டி இறைவன் தனது வார்த்தையை மனித இதயங்களில் தாராளமாக விதைப்பதையும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் செயல்படுவதையும் எடுத்துரைத்தார்.

இயேசு கிறிஸ்துவே தந்தையால் உலகில் விதைக்கப்படும் உயிருள்ள விதை என்றும், மனிதரின் மீட்புக்காக தமது உயிரை அர்ப்பணித்த அவர், பலன்தரும் விதையாக உலகில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

மனித இதயங்கள் சில நேரங்களில் பாறை நிலம், முள் நிறைந்த நிலம் அல்லது பாதையோர மண் போன்றதாக இருந்தாலும், இறைவன் விதைப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்று குறிப்பிட்ட திருத்தந்தை, அவரது அன்பின் வல்லமை நமது பலவீனங்களை விட மேலானது என்பதை எடுத்துக்காட்டினார்.

புனித யோவான் கிறிசோஸ்தோம் அவர்களின் போதனையை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, இறைவனின் கரங்களில் பாறை நிலம்கூட வளமான நிலமாக மாற முடியும்; முள் நிறைந்த இதயங்களும் தூய்மையடைந்து இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ளும் நிலையாக மாற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

இறைவன் நம்மீது கொண்டிருக்கும் நம்பிக்கை அறியாமையால் அல்ல, மாறாக நம்முள் மறைந்திருக்கும் நன்மையை அவர் அறிந்திருப்பதாலேயே என்று கூறிய திருத்தந்தை, நாமே நம்மில் காணாத நற்பண்புகளையும் இறைவன் காண்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இறைவார்த்தையை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளும்போது, தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, தயை, நற்குணம், விசுவாசம், சாந்தம், தன்னடக்கம் ஆகியவை நம் வாழ்வில் வளர்ந்து, உலகையும் மாற்றும் வல்லமையுடையவையாக அமையும் என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, கோடை விடுமுறை நாட்களில் ஓய்வுடன் சேர்த்து அமைதிக்கும் இறைவேண்டலுக்கும் நேரம் ஒதுக்கி, இறைவார்த்தையை ஆழமாக தியானிப்போம் என்றும், அதன் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் புதுப்பிக்கப்பட்டு, நற்செய்தியை வாழ்விலும் செயலிலும் அறிவிக்கும் சாட்சிகளாக மாறுவோம் என்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, திருத்தூதர்களின் அரசியும், நற்செய்தி அறிவிப்பின் விண்மீனுமான அன்னை மரியா, இறைவார்த்தையை நம்பிக்கையுடன் ஏற்று வாழ உதவுமாறு இறைவேண்டல்செய்து தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஜூலை 2026, 12:27