தேடுதல்

இறைவனுடனான உறவே வாழ்வின் உண்மையான செல்வம்!

காஸ்தல் கந்தோல்போவில் இடம்பெற்ற நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், இறையாட்சி மனித வாழ்வை விரிவுபடுத்தும் விலைமதிப்பற்ற புதையல் என வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஆண்டவருடனான உறவே வாழ்வின் உண்மையான புதையலும் விலைமதிப்பற்ற முத்துமாகும் என்றும், நுகர்வுக் கலாச்சாரத்தின் மாயையை விட்டு இறையாட்சியின் செல்வத்தைத் தேடுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜூலை 26, ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, அந்நாளின் நற்செய்தியில் இடம்பெறும் புதையல் மற்றும் விலைமதிப்பற்ற முத்து பற்றிய உவமைகளை (மத். 13:44–52) மேற்கோள்காட்டி "இறையாட்சியைக் கண்டடைவது மனித வாழ்வை குறுகியதாக மாற்றுவதில்லை; மாறாக, அதன் எல்லைகளை விரிவுபடுத்தி புதிய நம்பிக்கைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கிறது" என்று கூறினார்.

இறையாட்சி அனைவருக்கும் உரியது என்பதை இயேசுவின் பல உவமைகள் வெளிப்படுத்துகின்றன என்றும், விவசாயி, வணிகர், மீனவர், மறைநூல் அறிஞர், பெண், மேய்ப்பர், உழவர் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் வாழ்க்கையின் வழியாக இயேசு இறையாட்சியின் அழகை எடுத்துரைத்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய திருஅவையும் பல்வேறு மொழி, கலாச்சாரம், பொறுப்புகள் மற்றும் திறமைகளைக் கொண்ட மக்களின் ஒன்றிப்பாக உள்ளது என்றும், அனைவரையும் ஒன்றிணைக்கும் மறைந்திருக்கும் புதையலும் விலைமதிப்பற்ற முத்தும் இயேசு கிறிஸ்துவே என்றும் வலியுறுத்திய திருத்தந்தை, கடவுள் யாரையும் பாகுபடுத்திப் பார்க்காமல், குறிப்பாக சிறியோருக்கும் ஒதுக்கப்பட்டோருக்கும் தமது அன்பை இலவசமாக வழங்குகிறார் என்றும் கூறினார்.

மேலும், சாலமோன் அரசன் கேட்ட ஞானத்தைப் போல, உண்மையான செல்வத்தை அறியும் அருளை இறைவனிடம் கேட்க வேண்டுமென நம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, நுகர்வுக் கலாச்சாரம் தொடர்ந்து புதிய தேவைகளை உருவாக்கி மனித மனதை திருப்தியற்றதாக மாற்றுகிறது என்றும், இறைவனுடனான உறவுதான் உண்மையான மகிழ்ச்சியின் ஊற்றாகவும், பிறருடனான உறவுகளை அன்புடனும் நிறைவுடனும் வாழ்வதற்கான வலிமையை அளிக்கிறது என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக, ஞானத்தின் அரியணையாகிய அன்னை மரியாளின் பரிந்துரையால், நமது வாழ்வின் ஏக்கங்கள் அனைத்தும் இயேசுவில் நிறைவை அடையட்டும் என்று இறைவேண்டல் செய்து திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

27 ஜூலை 2026, 14:08