இறையாட்சி அன்பாலும் தாழ்மையாலும் வளர்கிறது: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இறையாட்சி அதிகாரத்தாலும் வல்லமையாலும் அல்ல, மாறாக தாழ்மை, பொறுமை மற்றும் அன்பின் வழியே அமைதியாக வளர்கிறது என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தினார்.
ஜூலை 19 , ஞாயிறன்று, காஸ்தல் கந்தோல்போவில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையில் இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, புனித மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் கோதுமையும் களைகளும், கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு ஆகிய உவமைகளை எடுத்துக்காட்டி, மனித வரலாற்றிலும் ஒவ்வொருவரின் வாழ்விலும் இறைவன் செயல்படும் விதத்தை அவை வெளிப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.
இறைவன் தனது வல்லமையை வெளிப்படையாகக் காட்டாமல், சிறுமையையும் எளிமையையும் தனது அன்பின் அடையாளமாகத் தேர்ந்தெடுக்கிறார் என்றும், மனிதர்கள் அவரை ஏற்கவும் மறுக்கவும் அவர் சுதந்திரம் அளிக்கிறார் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
மிகச் சிறிய விதை போலவும், மாவில் கலந்த புளிப்பு போலவும், இறையன்பு அமைதியாக உலகை மாற்றுகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, தீமை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தீமையின் நடுவிலும் இறையாட்சி தொடர்ந்து வளர்கிறது என்பதை கிறிஸ்தவர்கள் உணர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இருளிலும் நன்மையை அறிந்து, அவசரத் தீர்ப்புகளைத் தவிர்த்து, இறையருளின் செயல்பாட்டை பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுமாறு நம்பிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் அகந்தை, ஆதிக்க மனப்பான்மை மற்றும் அதிகாரத்தின் மூலம் நம்பிக்கையைத் திணிப்பதைத் தவிர்த்து, நற்செய்தியை மையமாகக் கொண்ட வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் "விதையின் தர்க்கத்தை", அதாவது வெற்றியையும் பெருமையையும் அல்ல, தங்களைச் சிறியவர்களாக்கி பிறருக்குச் சேவை செய்யும் வாழ்வை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
இவ்வாறு வாழ்வதன் மூலம், "நற்செய்தியின் சிறிய விதைகளாகவும், அன்பின் புளிப்பாகவும்" உலகை உள்ளிருந்து மாற்றும் மனிதர்களாக கிறிஸ்தவர்கள் மாற முடியும் என்று கூறிய திருத்தந்தை, இறைவார்த்தையைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்ட அன்னை மரியாவின் பரிந்துரையில் அனைவரையும் ஒப்படைத்து, நம்பிக்கையின் பயணத்தில் அவர் துணை நிற்க வேண்டுமென வேண்டி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
