தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் புதிய நூலான "ஆயுதமற்றதும் ஆயுதங்களை அகற்றுவதுமானது: அமைதி ஒரு கொடை" திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் புதிய நூலான "ஆயுதமற்றதும் ஆயுதங்களை அகற்றுவதுமானது: அமைதி ஒரு கொடை"  

அணு ஆயுதங்கள் அல்ல, ஆயுதக் குறைப்பே உண்மையான அமைதிக்கான பாதை" – திருத்தந்தை பதினான்காம் லியோ

"ஆயுதமற்றதும் ஆயுதங்களை அகற்றுவதுமானது: அமைதி ஒரு கொடை" என்ற புதிய நூலின் முன்னுரையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், அணு ஆயுதங்கள் அமைதியை உருவாக்காது என்றும், ஆயுதக் குறைப்பே உண்மையான அமைதிக்கான அடித்தளம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

"அணு ஆயுதங்கள் அமைதியை உருவாக்குவதில்லை; மாறாக, ஆயுதக் குறைப்பே நிலையான அமைதியை உருவாக்கும்" என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ள "ஆயுதமற்றதும் ஆயுதங்களை அகற்றுவதுமானது: அமைதி ஒரு கொடை" (Disarmed and Disarming: Peace Is a Gift) என்ற புதிய நூலின் முன்னுரையில் திருத்தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். அலெசாண்ட்ரோ பான்ஃபி அவர்கள் தொகுத்துள்ள இந்நூல், 2025 மே 8 அன்று திருத்தந்தையாகப் பொறுப்பேற்றதிலிருந்து அமைதி குறித்து அவர் ஆற்றிய உரைகள், மறையுரைகள் மற்றும் சிந்தனைகளை ஒரே தொகுப்பாக வழங்குகிறது.

உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு தமது சீடர்களுக்கு வழங்கிய முதல் வாழ்த்தான "உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்ற வார்த்தையை நினைவுகூரும் திருத்தந்தை, சிலுவையின் துன்பங்களையும் வன்முறையையும் தாங்கி உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே உண்மையான அமைதியின் முன்மாதிரி எனக் குறிப்பிடுகிறார்.

இன்று உலகின் 103-க்கும் மேற்பட்ட நாடுகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ போர்களால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய "துண்டு துண்டாக நடைபெறும் மூன்றாம் உலகப் போர்" என்ற கருத்தை மீண்டும் நினைவூட்டுகிறார்.

அமைதி என்பது அரசியல் தலைவர்களின் பொறுப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட பொறுப்புமாகும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். பிறரைத் தீர்ப்பிடுதல், குற்றம் சாட்டுதல், வெறுப்பை வளர்த்தல் போன்றவற்றிற்குப் பதிலாக, குடும்பம், பணியிடம், சமூக உறவுகள் ஆகியவற்றில் மன்னிப்பு, புன்னகை, அன்பான வார்த்தை போன்ற சிறிய செயல்களின் வழியே அமைதி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார்.

அணு ஆயுதங்களே பாதுகாப்பை வழங்குகின்றன என்ற எண்ணத்தை நிராகரிக்கும் திருத்தந்தை, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அனுபவங்களுக்குப் பின்னரும் உலகம் மீண்டும் ஆயுதப் போட்டியில் ஈடுபடுவது மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரிக்கிறார். "மீண்டும் ஒருபோதும் போர் வேண்டாம்" என்ற திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களின் வேண்டுகோள் இன்றும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

1983-ஆம் ஆண்டு அணு பேரழிவைத் தவிர்க்க உதவிய சோவியத் அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெத்ரோவின் மனச்சாட்சிப்பூர்வமான முடிவை நினைவுகூரும் திருத்தந்தை, "ஒரே ஒருவரின் மனச்சாட்சி முழு உலகிற்கும் மதிப்புடையதாக இருக்க முடியும்" என்று வலியுறுத்துகிறார். மனிதர்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் போர் முடிவுகளை எடுக்கும் உலகம் மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

மேலும், ஆசீர்வதிக்கப்பட்ட ஃப்ளோரிபெர்ட் புவானா சுயி, இறை ஊழியர்கள் ஜியோர்ஜியோ லா பிரா மற்றும் டொரதி டே போன்றோர் அமைதிக்காக வாழ்ந்த சாட்சிகளாகத் திகழ்ந்ததை எடுத்துக்காட்டும் திருத்தந்தை, அமைதிக்கு சாட்சிகளாக வாழ அனைவரையும் அழைக்கிறார்.

அமைதி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்று வலியுறுத்தும் திருத்தந்தை, அன்பு, இரக்கம், தன்னலமற்ற தியாகம் ஆகிய கிறிஸ்துவின் போதனைகளே வன்முறை, வெறுப்பு மற்றும் தனிமையை வெல்லும் ஆற்றல் கொண்டவை எனக் கூறுகிறார்.

இறுதியாக, வன்முறையற்ற வழியில் பயணித்து, அமைதியைக் காக்கும் பணியை ஒவ்வொருவரும் தங்களின் வாழ்வின் இலட்சியமாக ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து நம்பிக்கையாளர்களையும், நல்லெண்ணம் கொண்ட அனைவரையும் அவர் அழைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

22 ஜூலை 2026, 13:53