காஸ்தல் கந்தோல்போவில் அமைதியான ஓய்வை மேற்கொள்ளும் திருத்தந்தை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
காஸ்தல் கந்தோல்போவில் கோடைகால ஓய்வை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், செபம், ஓய்வு, வாசிப்பு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் இந்த காலத்தை செலவிடுவார் என்று புனித தாமஸ் வில்லனோவா ஆலயத்தின் பங்குத்தந்தை ததேயுஸ் ரோஸ்மஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறிய அருள்பணி ரோஸ்மஸ் அவர்கள், திருத்தந்தை அப்போஸ்தலர் மாளிகையின் பால்கனியில் இருந்து தன்னையும் பங்கு மக்களையும் தனிப்பட்ட முறையில் வாழ்த்தியது எதிர்பாராத மகிழ்ச்சியை அளித்ததாக குறிப்பிட்ட அதைவேளை இது பங்குத்தளத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அழகிய செயல் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டு காஸ்தல் கந்தோல்போ வருகை முழுமையாக ஓய்வுக்காகவே அமைந்துள்ளது என்றும், திருத்தந்தை தாமே செபம், ஓய்வு, வாசிப்பு மற்றும் உடற்பயிற்சிக்காக இந்த நாட்களை செலவிட விரும்புவதாக தெரிவித்திருப்பதாகவும் பங்குத்தந்தை தெரிவித்தார்.
மேலும் திருத்தந்தை அமைதியாகவும் சுதந்திரமாகவும் இந்த காலத்தை கழிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்று தெரிவித்த அருள்பணி ரோஸ்மஸ் அவர்கள், கடந்த ஓராண்டாக திருத்தந்தை அடிக்கடி காஸ்தல் கந்தோல்போவிற்கு வந்தபோது பலமுறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், ஒவ்வொரு சந்திப்பிலும் அவரது தந்தைபோன்ற அன்பையும் நெருக்கத்தையும் உணர முடிந்ததாகவும் எடுத்துக்காட்டினார்.
கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி புனித தாமஸ் வில்லனோவா ஆலயத்தில் திருத்தந்தை தலைமையில் நடைபெற்ற முதல் திருப்பலி மறக்க முடியாத நிகழ்வாக அமைந்ததாகவும், அப்போது திருத்தந்தை பங்குத்தளத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய திருக்கிண்ணத்தை அவரது கைகளிலிருந்து பெற்றது தனது குருத்துவ வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக இருந்ததாகவும் அருள்பணி ரோஸ்மஸ் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்மீது காஸ்தல் கந்தோல்போ மக்களுக்கு இன்றும் ஆழமான பாசம் இருப்பதாகவும், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வருகை அந்த இனிய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதாகவும் அருள்பணி ரோஸ்மஸ் அவர்கள் தெரிவித்தார்.
திருஅவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோடைகால இருப்பிடமான காஸ்தல் கந்தோல்போ, 2026ஆம் ஆண்டில் 400 ஆண்டுகால பாரம்பரியத்தை நிறைவு செய்கிறது. 1626ஆம் ஆண்டு திருத்தந்தை எட்டாம் அர்பன் தொடங்கிவைத்த இந்த பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில், மறைமாவட்டம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் பங்குத்தளம் இணைந்து நினைவு விழாக்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
