தேடுதல்

கோப்பு படம்: முதியோரைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ கோப்பு படம்: முதியோரைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ 

முதியவர்கள் சுமையல்ல; பேணிப் பாதுகாக்க வேண்டிய இறைவனின் கொடை !

ஆறாவது உலக தாத்தா-பாட்டிகள் மற்றும் முதியோர் நாளை முன்னிட்டு, வத்திக்கான் அதிகாரி வித்தோரியோ ஸ்கெல்சோ, முதியவர்களை திருஅவையின் மறைப்பணியில் முக்கிய பங்காளிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். தனிமையில் வாழும் முதியவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் நிலையான உறவை உருவாக்குவதன் மூலம் இறைவனின் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும், எந்த முதியவரும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூலை 26, ஞாயிறன்று, புனிதர்கள் சுவக்கீன், அன்னா திருவிழாவையொட்டி கொண்டாடப்பட்ட ஆறாவது உலக தாத்தா-பாட்டிகள் மற்றும் முதியோர் நாளை முன்னிட்டு, முதியவர்கள் சுமை அல்ல; பேணிப் பாதுகாக்க வேண்டிய இறைவனின் கொடை " என்று பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் (Dicastery for Laity, Family and Life) முதியோர் மேய்ப்புப் பணியின் பொறுப்பாளர் வித்தோரியோ ஸ்கெல்சோ (Vittorio Scelzo) அவர்கள் வலியுறுத்தினார்.

வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறிய ஸ்கெல்சோ (Vittorio Scelzo) அவர்கள், கோவிட் - 19 பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட இந்த உலக நாள், ஆண்டுதோறும் முக்கியத்துவம் பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் முதியவர்களை பராமரிப்பு பெறுபவர்களாக மட்டுமன்றி, திருஅவையின் மறைப்பணியில் தீவிர பங்காளிகளாகக் காண்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் இவ்வாண்டு உலக நாளுக்கான கருப்பொருளான "நான் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்" (எசாயா 49:15) என்ற இறைவார்த்தைகளை எடுத்துக்காட்டிய ஸ்கெல்சோ அவர்கள், குறிப்பாக தனிமையில் வாழும், நோயுற்ற அல்லது வீட்டை விட்டு வெளியே வர இயலாத முதியவர்களை நேரில் சென்று சந்திப்பதன் மூலம் இறைவனின் அன்பை செயலில் வெளிப்படுத்துமாறு அனைத்து கிறிஸ்தவ சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

முதுமைப் பருவத்தில் மிகப்பெரிய சவாலாக இருப்பது தனிமை உணர்வே என்றும், வெறும் சேவைகளை வழங்குவதைக் கடந்து, நிலையான உறவுகளை உருவாக்கும் சமூகங்களாக பங்குகள் மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலகின் பல மறைமாவட்டங்களில், தன்னார்வலர்களின் இல்லச் சந்திப்புகள், தலைமுறைகளை இணைக்கும் நிகழ்ச்சிகள், இளைஞர்கள் முன்னெடுக்கும் விழிப்புணர்வு இயக்கங்கள் போன்ற பல படைப்பாற்றல்மிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதுமை என்பது ஆன்மிக ஓய்வுக்காலம் அல்ல; அது இறைவன் அளிக்கும் ஓர் அழைப்பு என்ற திருத்தந்தை அவர்களின் கருத்தை சுட்டிக்காட்டிய ஸ்கெல்சோ அவர்கள், முதியவர்கள் செப வாழ்வில் நிலைத்து, உலக அமைதிக்காக மன்றாடும் முக்கியப் பணியை ஏற்குமாறு அழைப்பு விடுத்ததுடன்,  எந்தப் பங்கிலும் எந்த ஒரு முதியவரும் புறக்கணிக்கப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

28 ஜூலை 2026, 13:25