இளைஞர்கள் கிறிஸ்துவில் வேரூன்றி நம்பிக்கையுடன் வாழ வேண்டும்: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இளைஞர்கள் ஆண்டவரில் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, 2023ஆம் ஆண்டு லிஸ்பனில் நடைபெற்ற உலக இளைஞர் நாளில் பெற்ற விசுவாச உற்சாகத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் தக்கவைத்துக்கொள்ளுமாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
போர்த்துகலின் லமேகோ நகரில் ஜூலை 24 முதல் 26 வரை இடம் பெற்ற இரண்டாவது "ரிஜாய்ஸ்" (Rejoice) தேசிய இளைஞர் நாளை முன்னிட்டு அனுப்பிய காணொளிச் செய்தியில், இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, உலக இளைஞர் நாளில் பல மொழிகள், பல பண்பாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து கிறிஸ்துவை ஆழமாகச் சந்தித்த அனுபவத்தை எடுத்துக்காட்டினார்.
இயேசுவே நம் மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் ஆதாரம் என்று வலியுறுத்திய திருத்தந்தை, அண்மையில் இடம்பெற்ற யூபிலி கொண்டாட்டங்களிலும், ஸ்பெயினுக்கான திருத்தூதுப் பயணத்திலும் இளைஞர்களின் உற்சாகமான விசுவாசம் தம்மை ஆழமாக ஊக்குவித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இளைஞர்களின் உள்ளத்தில் எழும் தேடலையும், வாழ்க்கை குறித்த உள்ளார்ந்த ஏக்கத்தையும் கண்டு அஞ்ச வேண்டாம் என்றும், மாறாக, அவற்றை கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாக அறிந்து பின்பற்றுவதற்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ளுமாறும் திருத்தந்தை இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.
மேலும், தினமும் நற்செய்தியை வாசித்து, அமைதியும் சகோதரத்துவமும் நிலவும் உலகை உருவாக்கும் கனவைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளவும், எந்தச் சூழ்நிலையும் யாரும் உங்கள் நம்பிக்கையைப் பறித்துவிட அனுமதிக்க வேண்டாம் என்றும் திருத்தந்தை அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
செபத்தின் வழியாக திருமண வாழ்வு, குருத்துவம் அல்லது துறவற வாழ்வு ஆகியவற்றில் தங்களுக்கு இறைவன் அளிக்கும் அழைப்பை அறிந்துகொள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, "ஒவ்வொருவரும் புனிதராக அழைக்கப்பட்டவர்கள் என்றும், கிறிஸ்துவைப் போல உண்மையான மனிதர்களாக வாழுங்கள்; அப்போது உலகை சிறந்ததாக மாற்ற முடியும்" என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, போர்த்துகலின் இளைஞர்கள், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் அனைவருக்கும் அன்னை பாத்திமாவின் பரிந்துரையை வேண்டி, திருத்தூது ஆசீரை வழங்கிய திருத்தந்தை, 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் கொரியாவின் சியோலில் நடைபெறவுள்ள உலக இளைஞர் நாளில் அவர்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்து தனது காணொளிச் செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
