தொழில்நுட்பம் உண்மை மற்றும் பொதுநலனுக்குச் சேவை செய்ய வேண்டும்: திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் எப்போதும் உண்மை, மனித மாண்பு மற்றும் பொதுநலனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
சிலியின் சாண்டியாகோவில் ஜூலை 27–28 நடைபெற்ற "திருஅவையின் தகவல் தொடர்பும் செயற்கை நுண்ணறிவின் சவால்களும்" என்ற ஏழாவது அனைத்துலக கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பிய செய்தியில் திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளைச் சேர்ந்த தகவல் தொடர்பாளர்கள், கல்வியாளர்கள், மறைப்பணியாளர்கள் மற்றும் திருஅவை பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கருத்தரங்கில், திருத்தந்தையின் "மகத்தான மானுடம் " திருமடலின் ஒளியில் செயற்கை நுண்ணறிவின் ஒழுக்கவியல், கலாச்சார மற்றும் சமயப் பரிமாணங்கள் குறித்து ஆராயப்பட்டது.
தூய ஆவியின் வழிநடத்துதலுடன், செயற்கை நுண்ணறிவின் சவால்களை ஞானத்துடனும் பொறுப்புணர்வுடனும் எதிர்கொண்டு, மக்களிடையே சந்திப்பையும் நற்செய்தி அறிவிப்பையும் தகவல் தொடர்பு வளர்க்க வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய சாண்டியாகோ பேராயர் கர்தினால் பெர்னாண்டோ சோமாலி அவர்கள், சமூக ஊடகங்கள் மனித உணர்வுகள், உறவுகள் மற்றும் வாழ்வனுபவங்களை பிரதிபலிக்கும் உண்மையான மனித வெளிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொடர்பு உண்மை, நன்மை, அழகு, பயன்தன்மை ஆகிய நான்கு அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், அவ்வாறான தகவல் தொடர்பே உரையாடலையும் சகோதரத்துவத்தையும் வளர்த்து, மனிதகுலத்தைப் பிரிக்கும் "பாபேலை" அல்ல, ஒற்றுமையையும் அமைதியையும் உருவாக்கும் "எருசலேமை" கட்டியெழுப்ப உதவும் என்றும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.
சிலி ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ரெனே ரெபொலேதோ சலினாஸ் அவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்தும் ஒவ்வொரு மனிதரின் மீறப்பட முடியாத மாண்பை அடிப்படையாகக் கொண்டு முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
