திருத்தந்தையின் அமைதிச் செய்தி உலக மனச்சாட்சியை விழிப்பூட்டும் – பான்ஃபி
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் புதிய நூலான "ஆயுதமற்ற நிலையும் ஆயுதங்களை களைதலும் : அமைதி ஒரு கொடை" (Disarmed and Disarming: Peace Is a Gift) என்ற நூல், அமைதி குறித்த அவரது போதனைகளை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய முயற்சியாகும் என்று அதன் தொகுப்பாசிரியரான இத்தாலிய பத்திரிகையாளர் அலெசாண்ட்ரோ பான்ஃபி அவர்கள் தெரிவித்துள்ளார்.
வத்திக்கான் ஊடகத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறிய பான்ஃபி அவர்கள், நற்செய்தியை அடிப்படையாகக் கொண்ட திருத்தந்தையின் செய்தியே அதன் உண்மையான வலிமை என்று குறிப்பிட்டார்.
"சூழல்கள் மாறுபட்டாலும், திருத்தந்தையின் ஒரே அக்கறை, உரையாடலை வளர்ப்பதும், பாலங்களை அமைப்பதும், 'நண்பர்–எதிரி' என்ற மனப்பான்மையைத் தாண்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமாகும்" என்று பான்ஃபி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
2025 மே 8 அன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், "உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்ற வாழ்த்துடன் தனது திருப்பணியைத் தொடங்கிய திருத்தந்தை அவர்கள், அமைதியை தனது அனைத்து உரைகள், மறையுரைகள் மற்றும் சந்திப்புகளின் மையக் கருத்தாகக் கொண்டுள்ளார். இந்தப் பின்னணியில், வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், திருத்தந்தையின் அமைதி குறித்த முக்கிய சிந்தனைகளையும் உரைகளையும் ஒரே தொகுப்பாக வழங்குகிறது.
திருத்தந்தைக்கு இராணுவ வலிமை இல்லாவிட்டாலும், அவரது அறநெறி சார்ந்த அழைப்பு உலக மனச்சாட்சியைத் தூண்டும் ஆற்றல் கொண்டது என்றும், அதுவே உலகத் தலைவர்களையும் சிந்திக்க வைக்கும் சக்தியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நூலில், அமைதி ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பு என்றும், அது நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்துகிறார் என்று குறிப்பிட்ட பான்ஃபி அவர்கள், 1983-ஆம் ஆண்டு அணு பேரழிவைத் தவிர்க்க உதவிய சோவியத் அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெத்ரோவின் மனச்சாட்சிப்பூர்வமான முடிவை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டு, "ஒரே ஒருவரின் மனச்சாட்சி முழு உலகிற்கும் மதிப்புடையதாக இருக்க முடியும்" என்று திருத்தந்தை நினைவூட்டுவதை சுட்டிக்காட்டினார்.
போர், வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவது நமது வீடுகளிலும், பணியிடங்களிலும், சமூக உறவுகளிலும் அமைதியை உருவாக்குவதிலிருந்து தொடங்குகிறது என்று பான்ஃபி அவர்கள் கூறினார்.
புனித அகுஸ்தீனாரின் இறைநகரம் (De Civitate Dei) என்ற நூல், திருத்தந்தை அவர்களின் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நீதியையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்குவது கிறிஸ்தவர்களின் பொறுப்பு என்பதை திருத்தந்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்து பான்ஃபி அவர்கள் நேர்காணலை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
