தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

எளிய இல்லத்தில் இறைவனின் பிரசன்னம் – திருத்தந்தையை பெத்லகேம் குடிலோடு ஒப்பிட்டு மாட்ரிட் பேராயர் வரவேற்பு!

பன்முகத்தன்மை கொண்ட மாட்ரிட் திருஅவையின் சார்பில் திருத்தந்தைக்கு முதல் நெஞ்சார்ந்த வரவேற்பை கர்தினால் பேராயர் பதிவு செய்தார். "மாட்ரிட்டில் இருந்தால் நீங்களும் மாட்ரிட்காரரே" என்ற கூற்றுக்கேற்ப, திருத்தந்தை இப்போது தங்களில் ஒருவராக மாறியுள்ளார் என்று நெகிழ்ந்தார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

துடிப்பான, பன்முகத்தன்மை கொண்ட மாட்ரிட் திருஅவையின் சார்பில் திருத்தந்தைக்கு நன்றி கலந்த முதல் வரவேற்பை கர்தினால் பேராயர் நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார். "நீங்கள் மாட்ரிட்டில் இருந்தால், நீங்கள் மாட்ரிட்டைச் சேர்ந்தவரே" என்ற அந்நகரத்தின் புகழ்பெற்ற சொற்றொடரை நினைவுகூர்ந்த பேராயர், இன்று மாட்ரிட் நகரின் ஒருவராக மாறியுள்ள திருத்தந்தைக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து பேசிய கர்தினால் பேராயர், "மாட்ரிட் நகரம் எப்போதுமே திறந்த கதவுகளையும், மனிதர்களை இன்முகத்தோடு வரவேற்கும் பண்பையும் கொண்டது" என்றார். இன்று திருத்தந்தை மாட்ரிட்டிற்குள் நுழைவதற்குத் தேர்ந்தெடுத்துள்ள கதவு, பார்ப்பதற்குச் சிறியதாக இருந்தாலும், இறைவனின் அளப்பரிய இரக்கத்தால் அது பிரம்மாண்டமாகத் திகழ்கிறது என்று அவர் விவரித்தார்.

இறைவன் உலகிற்குள் நுழைவதற்குக் குடிலாகத் தேர்ந்தெடுத்த 'பெத்லகேம்' நகரைப் போலவே, ஏழை மக்கள் வாழும் இந்த எளிய இல்லமும் இறைவனின் பிரசன்னத்தைக் கொண்டு சேர்க்கும் புனித இடமாக மாறியுள்ளது என்று கர்தினால் சுட்டிக்காட்டினார்.

காரபான்செல் (Carabanchel), லத்தீனா (Latina), அலுச்சே (Aluche) மற்றும் லூசெரோ (Lucero) ஆகிய மாட்ரிட்டின் எளிய நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளின் அன்றாட உழைப்பையும், வாழ்வாதாரப் போராட்டங்களையும் கர்தினால் தனது உரையில் கோடிட்டுக் காட்டினார்.

"ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களின் பார்வையில் இருந்து நற்செய்தியை நோக்கும்போதுதான், அதன் உண்மைப் பொருளை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்" என்ற உன்னத நம்பிக்கையின் அடிப்படையில், திருத்தந்தைக்குத் தங்களது முதல் அன்பின் அணைப்பை வழங்குவதாக அவர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். இத்தகைய எளிய தளங்களில் இருந்து திருத்தந்தை தனது பயணத்தைத் தொடங்குவது வெறும் மேய்ப்புப்பணி சார்ந்த தேர்வு மட்டுமல்ல, அது ஒரு ஆழமான 'விசுவாச அறிக்கை' என்றும் கர்தினால் பேராயர் தெரிவித்தார்.

'உங்களைச் சுற்றிப் பாருங்கள்' என்ற அழைப்போடு நமது பார்வையை உயர்த்தும் அதே வேளையில், தங்குமிடம், மாண்பான வேலை, தனிமைக்கான ஆறுதல் மற்றும் வாழ்வின் நம்பிக்கையைத் தேடி அலையும் எளிய மக்களின் எதார்த்த நிலையைத் திருஅவை நன்கு உணர்ந்துள்ளது என்று கர்தினால் தெரிவித்தார்.

இதற்குச் சான்றாக, கடந்த ஆண்டில் மட்டும் மாட்ரிட் 'காரிதாஸ் தொண்டு நிறுவனம், ஏறத்தாழ 400 சமூகத் திட்டங்களின் வழியாக 90,000-க்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்கியுள்ளது என்ற முக்கியப் புள்ளிவிவரத்தை அவர் வெளியிட்டார். மேலும், பல்வேறு துறவறச் சபைகளும் இணைந்து புலம்பெயர்ந்தோர், முதியவர்கள் மற்றும் வீடற்ற ஏழைகளுக்காகப் பல நூறு நற்பணிகளை ஆற்றி வருவதைக் குறிப்பிட்டார். இவர்களின் சார்பாகவும், தினமும் களத்தில் பணியாற்றும் 9,500-க்கும் மேற்பட்ட காரிதாஸ் தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்களின் சார்பாகவும் திருத்தந்தைக்குத் தனது பேரன்பை சமர்ப்பித்தார்.

பெத்லகேமைப் போல நற்செய்தியின் உன்னதப் பாதைக்கு வழிவகுக்கும் இந்த எளிய கதவின் வழியாக உங்களை மாட்ரிட் நகருக்குள் அன்போடு வரவேற்கிறோம்" என்று கூறிய கர்தினால் பேராயர்: "இந்த உன்னதப் பயணம், நம்மை ஒவ்வொரு படியாக வழிநடத்தி, மாட்ரிட்டிலிருந்து விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லட்டும்!" என்ற ஆசீர்வாத முழக்கத்தோடு தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

07 ஜூன் 2026, 18:36