பார்சிலோனா பேராலயத்தில் திருத்தந்தைக்கு எழுச்சிமிகு வரவேற்பு!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 09 செவ்வாயன்று பார்சிலோனா உயர் மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலான திருச்சிலுவை மற்றும் புனித யூலாலியா பேராலயத்திற்குச் சென்றார். அங்கு அவருக்குப் பேராயர் கர்தினால் உவான் ஒசே ஒமெல்லா, உதவி ஆயர்கள், குருத்துவ மாணவர்கள் மற்றும் விசுவாசிகள் இணைந்து மிக விமரிசையான வரவேற்பு அளித்தனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 09, செவ்வாயன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக, பார்சிலோனா உயர் மறைமாவட்டம் திருச்சிலுவை மற்றும் புனித யூலாலியா பேராலயத்திற்கு (Cathedral of the Holy Cross and Saint Eulalia)  சென்றார். அங்கு திருத்தந்தை அவர்களுக்கு மிக விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நகருக்கான திருத்தந்தையின் முதல் அதிகாரப்பூர்வ நிகழ்வாக அமைந்த இந்த வருகை, மறைமாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக் கோவிலில் (Mother Church) தொடங்கியது.

பார்சிலோனா பேராயர் கர்தினால் உவான் ஒசே ஒமெல்லா அவர்கள் திருத்தந்தையை வரவேற்று சிறப்புரை ஆற்றினார். பார்சிலோனாவில் பயணம் செய்யும் ஒட்டுமொத்த திருஅவையின் சார்பாக வழங்கப்பட்ட வரவேற்புரையில், திருத்தந்தையின் வருகைக்காக தங்களது அளப்பரிய மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

திருத்தந்தையை வரவேற்பதற்காக உதவி ஆயர்கள், பேராலய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், மறைமாவட்ட செயலக அதிகாரிகள், பல்வேறு மறைமாவட்ட பிரதிநிதிகள், குருத்துவ மாணவர்கள், பேராலயப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் அங்கு கூடியிருந்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு, திருவழிபாட்டின் 'ஆறாம் மணி நேர' (நண்பகல்) கூட்டுப் இறைவேண்டலுடன் தொடங்கியது. உலகளாவிய கிறிஸ்தவ சமூகம், அகில உலகம் மற்றும் உலகளாவிய திருஅவையின் ஆயராக விளங்கும் திருத்தந்தை ஆகியோரின் மீது இறைவனின் ஆசி பொழியப்பட வேண்டி நம்பிக்கையாளர்கள் தங்களது மன்றாட்டுகளையும் எழுப்பினர்.

இந்த நிகழ்வு, அமைதி மற்றும் ஒற்றுமைக்கான இறைவேண்டலோடு நிறைவு பெற்றது. மேலும், உவகை பொங்கும் இதயத்தோடு திருத்தந்தையை வரவேற்கும் பார்சிலோனா உயர் மறைமாவட்டமும், உலகளாவிய திருஅவையும் இந்த உலகிற்கு "நம்பிக்கையின் விதைகளாக" மாற வேண்டும் என்ற உன்னத அழைப்பும் விடுக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஜூன் 2026, 11:15