பார்சிலோனாவின் புகழ்பெற்ற 'லூயிஸ் கொம்பானிஸ்' ஒலிம்பிக் மைதானத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பார்சிலோனாவின் புகழ்பெற்ற 'லூயிஸ் கொம்பானிஸ்' ஒலிம்பிக் மைதானத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்  (@Vatican Media)

பார்சிலோனா ஒலிம்பிக் மைதானத்தில் திருத்தந்தைக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

ஸ்பெயின் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு, பார்சிலோனாவின் 'லூயிஸ் கொம்பானிஸ்' ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் சூழ எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஜூன் 09, செவ்வாயன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக  பார்சிலோனாவின் புகழ்பெற்ற 'லூயிஸ் கொம்பானிஸ்' ஒலிம்பிக் மைதானத்தில் (Olympic Stadium “Lluís Companys”) பல்லாயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பங்கேற்ற திருவிழிப்பு வழிபாட்டை தலைமை தாங்கி வழிநடத்தினார். அத் திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை ஆற்றிய அருளுரை:

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

நிக்கதேமுவைப் போலவே, நாமும் இரவில் பயணிக்கும் திருப்பயணிகளாக இருக்கிறோம். நம் வாழ்வு கேள்விகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் போராட்டங்களால் நிறைந்த ஒரு பயணமாக அமைந்துள்ளது. நாம் அன்பையும், அர்த்தத்தையும், நம்மைத் தாங்கிப் பிடித்து நம் வாழ்வின் மறைபொருளைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு உண்மையையும் தேடுகிறோம். இந்தப் பயணத்தில், நாம் அவ்வப்போது நம்முடைய வரம்புகளை உணர்கிறோம். எல்லாவற்றுக்குமான பதில்களும் நம்மிடம் இல்லை; நம்மையோ, மற்றவர்களையோ அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையோ நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. நம் பாதையை வழிநடத்த ஒரு ஒளியைத் தேடுகிறோம்.

நம்பிக்கையின் பயணம் என்பது வாழ்வின் பயணத்திலிருந்து பிரிக்க முடியாதது என்பதை நிக்கதேமு நமக்கு நினைவூட்டுகிறார். கடவுள் உலகத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்ததால், அவர் தம் ஒரே மகனையே நமக்காகக் கொடுத்தார்; அவர் நமது மனித வரலாற்றில் நுழைந்து எப்போதும் நம்மோடு இருக்கிறார். இருப்பினும், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் கூட சந்தேகம், சோர்வு, ஏமாற்றம் மற்றும் பயம் ஆகியவை நிறைந்த இருள் சூழ்ந்த தருணங்களை எதிர்கொள்கிறார்கள். நற்செய்தி முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு நாம் தகுதியற்றவர்களாக உணரலாம் அல்லது நமது தோல்விகளால் மனச்சோர்வடையலாம்.

ஆனால் இந்த இரவுகள் அர்த்தமற்றவை அல்ல. அவை அருளின் தருணங்களாக மாறக்கூடும். இரவு நம்முடைய முகமூடிகளைக் கழற்றி, நாம் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. அது நமக்கு மனத்தாழ்மையைக் கற்றுக்கொடுக்கிறது மற்றும் நாம் எப்போதும் கடவுளின் இரக்கத்தை வேண்டுபவர்களாக இருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறது. வெறுமையாகத் தோன்றும் இடங்கள் புதிய வாழ்வு தொடங்கும் இடமாக மாறக்கூடும்.

நாம் மேலிருந்து மறுபிறப்புப் பெற வேண்டும் என்று இயேசு நிக்கதேமுவிடம் கூறுகிறார். கடவுள் உலகை தண்டிப்பதற்கு தம் மகனை அனுப்பவில்லை, மாறாக அதை மீட்கவே அனுப்பினார். நம் வாழ்வில் துன்பங்களோ, சோதனைகளோ வரும்போது, "இது கடவுளின் தண்டனை" என்றோ அல்லது "என் வாழ்க்கை இவ்வளவுதான்" என்றோ நாமே நம் வாழ்விற்குத் தீர்ப்பெழுதி முடங்கிவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, நிக்கதேமுவைப் போலவே, நாம் தொடர்ந்து தேடவும், கேள்வி கேட்கவும், தூய ஆவியின் குரலுக்கு செவி மடுக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம்.

நம்முடைய சொந்தப் பயணத்தைப் பற்றியும், நம் சமூகங்கள் மற்றும் சமுதாயத்தின் யதார்த்தங்களைப் பற்றியும் சிந்திக்கும்போது, நம்மையே நாம் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுக்கொள்வோம்: இன்று நாம் கடந்து செல்லும் இருள் சூழ்ந்த தருணங்கள் எவை? நாம் எதை மாற்ற வேண்டும் என்று இறைவன் கேட்கிறார்? புதுப்பித்தலுக்காக அவர் நம்மை எங்கே அழைக்கிறார்? நாம் அனைவரும் இணைந்து எத்தகைய எதிர்காலத்தை உருவாக்க அழைக்கப்படுகிறோம்?

இருளிலும் கூட, நாம் கடவுளைத் தேடுவதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. நாம் தூய ஆவியாருக்கு நம்மைத் திறந்து, நற்செய்தியின் ஒளியை வரவேற்போம். எவரும் அழிந்துபோவதை ஆண்டவர் விரும்புவதில்லை. அவர் நம்மை இருளிலிருந்து ஒளிக்கு அழைக்கிறார் மற்றும் புதிய வாழ்வின் கொடையை நமக்கு அருளுகிறார்.

கன்னி மரியாவின் பரிந்துரையின் வழியாக, அவருடைய ஆவியைப் பெற்றுக்கொண்டு, எப்போதும் அவருடைய ஒளியில் நடக்க ஆண்டவர் நமக்கு அருள் புரிவாராக.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஜூன் 2026, 11:28