தேடுதல்

திருத்தந்தையை வரவேற்ற பேராயர் கர்தினால் ஜோஸ் கோபோ கானோ திருத்தந்தையை வரவேற்ற பேராயர் கர்தினால் ஜோஸ் கோபோ கானோ  (@Vatican Media)

திருத்தந்தையை வரவேற்ற பேராயர் கர்தினால் ஜோஸ் கோபோ கானோ!

மாட்ரிட் நகரின் புகழ்பெற்ற அல்முதேனா பேராலயத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு மாட்ரிட்டின் பேராயர் கர்தினால் ஜோஸ் கோபோ கானோ சிறப்பான வரவேற்புரை ஆற்றினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மாட்ரிட் நகரின் அல்முதேனா பேரலாயத்தில், கர்தினால் ஜோஸ் கோபோ கானோ அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை வரவேற்றார். இந்நிகழ்வில் மாட்ரிட், அல்காலா மற்றும் கெட்டாவ் ஆகிய இடங்களிலிருந்து வந்த அருள்பணித்துவ மாணவர்கள், துறவியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசி சோபியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருத்தந்தை ஆற்றிவரும் புனித பேதுருவின் வழிவந்த திருத்தந்தைப் பணியை, மாட்ரிட் மற்றும் அதன் திருஅவை மாநிலத்தின் பாதுகாவலியான, அல்முதேனாவின் அன்னை மரியாளின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாகக் கூறிய கர்தினால், மாட்ரிட் நகரின் வரலாறு, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழும் அல்முதேனா கன்னிமரியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

"பல தலைமுறைகளாக, அன்னை மரியா நம்பிக்கை, குணமளிப்பு, ஆறுதல் மற்றும் எதிர்நோக்கின் ஊற்றாக இருந்து வருகிறார்" என்று கூறிய கர்தினால், "அல்முதேனா என்ற பெயர், அரபு மொழியில் 'அல்-முதைனா' அதாவது கோட்டை அல்லது அரண் என்ற சொல்லிலிருந்து உருவானது" என்றும் "அன்னை மரியா இது நம்பிக்கையின் புகலிடமாகவும், எதிர்நோக்கின் காவலராகவும் திகழ்வதை எடுத்துரைக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு பழமையான மரபை நினைவுகூர்ந்த அவர், படையெடுப்பின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் திருவுருவம், பின்னர் நகரத்தின் மதில்களுக்குள் இரண்டு எரியும் மெழுகுவர்த்திகளுடன் கண்டெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். "அன்றிலிருந்து, உள்ளூர் திருஅவையை அன்னை மரியா தாய்மைக்குரிய பராமரிப்புடன் வழிநடத்தி வருகிறார்" என்றும் தெரிவித்துள்ளார்

இன்றைய கண்ணுக்குத் தெரியாத சுவர்களான பயம், தனிமை, அலட்சியம் மற்றும் பிளவு ஆகியவை மக்களிடையே தொடர்ந்து பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதை சுட்டிக்காட்டிய கர்தினால் அவர்கள், "அன்னை மரியாவை உற்று நோக்குவதன் மூலம் கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் இணைக்கும் பாலங்களை உருவாக்கவும், அமைதியை வளர்க்கவும், சகோதரத்துவமிக்க சமூகங்களை உருவாக்கவும் ஊக்கம் பெறுகின்றனர்" என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, திருஅவையை நம்பிக்கையில் உறுதிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து தனது வரவேற்புரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

09 ஜூன் 2026, 12:03