திருத்தந்தைக்கு கர்தினால் ஜோஸ் கோபோ கானோ வரவேற்புரை!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மாட்ரிட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற சாண்டியாகோ பெர்னாபியூ அரங்கில் (Santiago Bernabéu Stadium) மறைமாவட்ட சமூகம் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வருகை தந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு, மாட்ரிட்டின் பேராயர் கர்தினால் ஜோஸ் கோபோ கானோ (Cardinal José Cobo Cano) சிறப்பான வரவேற்புரை ஆற்றினார்.
புனித அகுஸ்தினாரின் புகழ்பெற்ற வார்த்தைகளான "ஆண்டவருக்கு ஒரு புதியதொரு பாடலைப் பாடுங்கள்" என்பதை மேற்கோள் காட்டி தனது உரையைத் தொடங்கிய கர்தினால் ஜோஸ் கோபோ அவர்கள், திருஅவை என்பது வெறும் குரலால் மட்டுமல்லாமல், தனது இதயத்தாலும் வாழ்வாலும் இறைவனைப் பாட அழைக்கப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்தார்.
இறைமக்கள்தான் திருஅவையின் உண்மையான வடிவம் என்றும், அவர்கள் பன்முகத்தன்மையில் ஒன்றிணைந்து, ஒன்றிப்பு மற்றும் பகிரப்பட்ட பணியின் மூலம் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கர்தினால் ஜோஸ் கோபோ அவர்கள் எடுத்துக்காட்டினார்.
மேலும் தண்ணீரை உவமையாகக் கொண்டு, திருமுழுக்குதான் கிறிஸ்தவ அடையாளத்தின் ஊற்று மற்றும் திருஅவையின் ஒன்றிப்பின் அடித்தளம் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் ஜோஸ் கோபோ அவர்கள், பிரிவினைகளும் மோதல்களும் நிறைந்துள்ள இன்றைய உலகில், திருஅவையானது ஒன்றிப்பு, நம்பிக்கை, செவிமடுத்தல், பகுத்தறிவு மற்றும் தூய ஆவியாரைத் திறந்த மனதுடன் சந்திப்பதற்கான உன்னத அடையாளமாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உண்மையான ஒன்றிணைந்த பயணத்திற்கு வெறும் பல குரல்கள் ஒலிப்பது மட்டும் போதாது, மாறாக அவர்களுக்கிடையே நல்லிணக்கம் தேவை என்று கூறிய கர்தினால் ஜோஸ் கோபோ அவர்கள், "மௌனமாக இருப்பது மிகப்பெரிய ஆபத்து அல்ல, மாறாக பிரிவினைதான் பேராபத்து" என்றும், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் செவிமடுத்து, தூய ஆவியானவர் தங்களை வழிநடத்த அனுமதிக்கும்போதுதான் உண்மையான நல்லிணக்கம் உருவாகும் என்றும் எடுத்துக்காட்டினார்.
இறுதியாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு மாட்ரிட் திருஅவையின் முழுமையான ஆதரவை உறுதி அளித்த கர்தினால் ஜோஸ் கோபோ, மாட்ரிட் மறைமாவட்டங்கள் இந்த உலகிற்கு நம்பிக்கை, ஒன்றிப்பு மற்றும் எதிர்நோக்கின் "புதிய பாடலாக" மாறும் என்ற தனது அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தி உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
