“கடந்த காலம் எதிர்காலத்தை முடிவுசெய்வதில்லை” – சிறைக்கைதிகளிடம் திருத்தந்தையின் அழைப்பு!

ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 10 அன்று பார்சிலோனாவுக்கு அருகிலுள்ள ப்ரியான்ஸ் 1 சிறைச்சாலைச் சீர்திருத்த மையத்திற்குச் சென்ற திருத்தந்தை, கைதிகள், சிறைப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களைச் சந்தித்து உரையாற்றினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 10, புதனன்று, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பார்சிலோனாவுக்கு அருகிலுள்ள ப்ரியான்ஸ் 1 சிறைச்சாலைச் சீர்திருத்த மையத்திற்குச் சென்றார். அங்கு சிறைக்கைதிகள், சிறைப்பணியாளர்கள், மற்றும் தன்னார்வலர்களைச் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மொண்ட்ஸே (Montse) மற்றும் ஜோசஃபினா (Josefina) ஆகியோர் நம்மோடு பகிர்ந்து கொண்ட சாட்சியங்களால் நான் ஆழமாகத் தொடப்பட்டேன். தந்தை இயேசு (Jesús) அவர்களின் வார்த்தைகளுக்காகவும், மறைமாவட்ட சிறைப்பணித் திட்டத்தின் ஆன்மீகப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தாராளமான சேவையை எடுத்துக் காட்டியதற்காகவும் அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுள் ஒவ்வொருவரையும் விரும்பி படைத்து நேசிப்பதால், ஒவ்வொரு மனிதரும் தனித்துவமான மற்றும் பறிக்க முடியாத மாண்பைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். நம் வாழ்வின் எந்தவொரு சூழ்நிலையும் ஆண்டவர் தன் பார்வையை நம்மிடமிருந்து திருப்புவதற்கு காரணமாக அமையாது. அவருடைய இரக்கமுள்ள அன்பு எப்போதுமே நம்முடைய பலவீனங்கள், தவறுகள் மற்றும் தோல்விகளை விடப் பெரியதாகும்.

அன்பான சகோதர சகோதரிகளே, இந்தச் செய்தி, அன்பானவர்களைப் பிரிந்த துயரத்தையும், கடினமான சூழ்நிலைகளின் சுமையையும் சுமந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏமாற்றம், தனிமை அல்லது சோகம் ஏற்படும் போது, உங்கள் கண்களை ஆண்டவரை நோக்கி உயர்த்துங்கள்; அவரோ, பல மனிதர்களின் அன்பு மற்றும் ஆதரவின் வழியாக உங்களிடம் நெருங்கி வருவதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.

தவறுகள் நீங்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதில்லை என்பதை நினைவில் வையுங்கள். கடவுளின் அருள் ஒவ்வொரு வாழ்க்கையையும் மாற்றியமைக்க முடியும் என்று புனித அகஸ்டின் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் ஆண்டவர் மீது

நம்பிக்கை வைத்து, அவரால வழிநடத்தப்பட நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, கடந்த காலம் நம்மைச் சிறைப்படுத்தாது என்பதை நாம் கண்டுகொள்கிறோம். மாறாக, அது நம்பிக்கை மற்றும் புதுப்பித்தலால் குறிக்கப்பட்ட ஒரு புதிய பயணத்தின் தொடக்கப் புள்ளியாக மாறும்.

நம் இதயங்களில் ஆண்டவருக்கு இடமளிப்போம். அவருடைய திருமுகத்தைத் தேடுவோம். அவருடைய அன்பு நம் வாழ்வுப் பாதையை வழிநடத்த அனுமதிப்போம். அவர் தொடர்ந்து நம்மை நம்பிக்கைக்கு அழைக்கிறார், மேலும் எந்தவொரு சுவரோ அல்லது தடையோ பறிக்க முடியாத ஒரு புதிய எல்லையை நமக்கு முன்னால் திறக்கிறார். அவர் நம்மிடையே பிரசன்னமாய் இருக்கிறார், நம் இதயங்களின் ஆழத்தில் நம்மிடம் பேசுகிறார். நாம் அவரை ஏற்றுக்கொள்வதற்காக மட்டுமே அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

அன்பான நண்பர்களே, உங்கள் வாழ்விற்கான கடவுளின் கனவைக் காண்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். கடவுள் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை அன்பு செய்கிறார். ஆனாலும் நீங்கள் உங்களின் மிகச் சிறந்த வடிவமாக மாற உங்களில் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். கிறிஸ்தவனாக இருப்பது என்றால் ஒருபோதும் தவறுகளே செய்யாமல் இருப்பது என்று அர்த்தமல்ல; மாறாக, மீண்டும் தொடங்கவும், மனம் வருந்தவும், ஒப்புரவாகவும், மன்னிக்கவும் கற்றுக்கொள்வது என்று பொருள்.

உங்கள் ஒவ்வொருவரையும் இரக்கத்தின் அன்னை மரியாவின் தாய்மைப் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன். ஆண்டவர் உங்களை மிகுதியாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஜூன் 2026, 13:50