திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றபோது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்றபோது  (@VATICAN MEDIA)

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள்

ஜூன் 6 அன்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் ஸ்பெயின் தலைநகர் மார்டிட் நகரை வந்தடைந்து, அரசர் மற்றும் அரசியாரைச் சந்திக்கிறார். மேலும் அரசு அதிகாரிகள், தூதரகக் குழுவினர், சமூகத் திட்டப் பணியாளர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்தித்து உரையாற்றுவதன் மூலம் தனது முதல் நாள் நிகழ்வுகளை நிறைவு செய்கிறார்.

இம்மானுவேல் மரியான் – வத்திக்கான் 

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் முதல் நாளை இன்று ஜூன்  6 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியிருக்கிறார்.

காலை 08:00 மணிக்கு உரோமை நகரின் ஃபியுமிசினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகருக்கு விமானம் மூலம் புறப்படுகிறார். மாட்ரிட் ஸ்பெயின் நாட்டின் தலைநகரமும் அரசியல், கலாச்சார மற்றும் திருஅவை வாழ்வின் முக்கிய மையமும் ஆகும்.

பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க நம்பிக்கை இந்த நகரின் அடையாளத்தை வடிவமைத்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், அறப்பணிகள், இளைஞர் இயக்கங்கள், மறைப்பணி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் திருஅவை தொடர்ந்து சமூகத்தில் செயல்பட்டு வருகிறது. இன்றைய ஐரோப்பாவில் காணப்படும் மதச்சார்பின்மை, இளைஞர்களின் ஆன்மீகத் தேடல் மற்றும் குடும்ப வாழ்வின் சவால்கள் அனைத்தும் மாட்ரிட்டில் பிரதிபலிக்கின்றன. இந்தச் சூழலில் திருத்தந்தையின் வருகை நம்பிக்கையையும் புதுப்பிப்பையும் வழங்குகிறது.

காலை மணி 10:30 க்கு அடோல்ஃபோ சுவாரெஸ் மாட்ரிட்-பராஜாஸ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைகிறார். பல ஆண்டுகளாக 'மாட்ரிட்-பராஜாஸ் விமான நிலையம்' என்று அழைக்கப்பட்டு வந்த இது, 2014 மார்ச் 24 அன்று "அடோல்ஃபோ சுவாரெஸ் மாட்ரிட்-பராஜாஸ்" (Adolfo Suárez Madrid-Barajas) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சிக்கு பிறகு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரான அடோல்ஃபோ சுவாரெஸின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது

முற்பகல் மணி 11:30 க்கு  மாட்ரிட் அரச மாளிகையில் அதிகாரப்பூர்வமான வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகல் 12:00 மணிக்கு மாட்ரிட் அரச மாளிகையில் ஸ்பெயின் நாட்டு அரசர் மற்றும் அரசியை சந்திக்கிறார். தொடர்ந்து பகல் மணி 12:30 க்கு அதிகாரிகள், சமூகம் மற்றும் தூதரகக் குழுவினரைச் சந்தித்து உரையாடுகிறார்.

மாலை 6 மணிக்கு தகவல் மற்றும் வரவேற்பு மையத்தில் "செடியா 24 மணிநேர சமூகத் திட்டத்தின்" (CEDIA 24 HORAS) பணியாளர்கள் மற்றும் பயனாளிகளைச் சந்தித்து அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்துகிறார்.

செடியா 24 மணிநேர சமூகத் திட்டம் 'காரித்தாஸ் மாட்ரிட்' (Cáritas Madrid) அமைப்பால் நிர்வகிக்கப்படும் ஒரு தகவல் மற்றும் வரவேற்பு மையமாகும். மாட்ரிட்டின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றான லுசெரோ (Lucero) பகுதியில் இது அமைந்துள்ளது. வீடற்ற மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய விளிம்பு நிலை மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சமே இது ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் ஒரு பாதுகாப்பான மையமாகும். எந்த நேரத்திலும் உதவி கோரி வரும் வீடற்றவர்களுக்கு இது அடைக்கலம் அளிக்கிறது. இதற்காக 24 மணி நேர அவசர தொலைபேசி உதவிச் சேவையும் இங்குண்டு.

காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பகல்நேர மையம் (Day Centre) செயல்படும். வீடற்ற ஆண்களும் பெண்களும் தங்களின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் குளியல் வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும்இ அவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை இரவுநேர காப்பகம் (Night Centre) செயல்படும்.  இங்கு தங்குவதற்கு பாதுகாப்பான வசதிகள் உள்ளன. ஆண்களுக்கு 45 படுக்கைகளும்இ மற்றொரு கட்டிடத்தில் பெண்களுக்கு 25 படுக்கைகள் என நாள்தோறும் 70 பேர் இரவு உறங்குவதற்கு இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் உடைமைகளைப் பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதியும் வழங்கப்படுகிறது.

வெறும் தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதோடு நின்றுவிடாமல், தனிநபர்களின் முழுமையான மறுவாழ்விற்கான வழிகாட்டலை ஒருங்கிணைந்த ஆதரவு அமைப்பு (Comprehensive Support) வழங்குகிறது. சுகாதாரம், தங்குமிட உரிமை, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்துப் பரிமாணங்களிலும் இது ஆதரவளிக்கிறது. இதன் மூலம் இங்கு வரும் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர் என்றும்இ 80 சதவீதத்தினர் மீண்டும் தெருக்களில் வாழும் நிலைக்குச் செல்லாமல் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

திருத்தந்தையின் வருகை சமூகத்தின் மிகவும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மீதான கத்தோலிக்கத் திருஅவையின் அக்கறையையும் இந்த மையத்தின் சேவையையும் உலகிற்கு உணர்த்துகிறது.

இறுதியாக இரவு மணி 8:30 க்கு பிளாசா டி லிமாவில் (Plaza de Lima) இளைஞர்களுடனான இறைவேண்டல் விழிப்பு நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றுகிறார். 2011-ஆம் ஆண்டில் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் தலைமையில் நடைபெற்ற உலக இளைஞர் நாள் (World Youth Day 2011) நிகழ்வுக்குப் பிறகு, சுமார் 15 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஒரு திருத்தந்தை மாட்ரிட் நகருக்குப் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த இடம் மீண்டும் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடும் ஒரு மாபெரும் ஆன்மீகக்கூடாரமாக மாறியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாசா டி லிமா சதுக்கம்இ சாந்தியாகோ பெர்னாவியூ (Santiago Bernabéu) மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் திருத்தந்தை ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்துகிறார்: திருஅவை ஆலயங்களுக்குள் மட்டுமல்ல; இளைஞர்கள் வாழும் தெருக்களிலும், நகரங்களிலும், கலாச்சாரங்களிலும் இருக்க வேண்டும். பிளாசா டி லிமாவில் நடைபெற்ற இந்த இறைவேண்டல் விழிப்பு, ஸ்பெயின் பயணத்தின் முதல் நிகழ்ச்சி மட்டுமல்ல. அது முழுப் பயணத்தின் ஆன்மாவாகும். மாட்ரிட் நகரின் இதயத்தில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உலக திருஅவைக்கான ஒரு சிறப்பான அழைப்பை முன்வைக்கிறார்: "உங்கள் கண்களை உயர்த்திப் பாருங்கள். உலகத்தைப் பாருங்கள். கிறிஸ்து உங்களை அழைக்கிறார். அறுவடை மிகுதி; பணியாளர்கள் தேவை." யோவான் நற்செய்தி அதிகாரம் 4 இறைவார்த்தை 35 இன் இந்த அழைப்பு, பிளாசா டி லிமாவிலிருந்து ஸ்பெயின் முழுவதும், அங்கிருந்து உலகம் முழுவதும் ஒலிக்கும் நம்பிக்கையின் குரலாக மாறும் என்ற நம்பிக்கையில் திருதந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது ஸ்பெயின் நாட்டிற்கான தனது முதல் நாள் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்கிறார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

06 ஜூன் 2026, 16:16