Magnifica Humanitas திருமடல் அறிமுக நிகழ்வின்போது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள். Magnifica Humanitas திருமடல் அறிமுக நிகழ்வின்போது திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள். 

செயற்கை நுண்ணறிவு காலத்திற்கான அறநெறி வழிகாட்டி!

அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர் எலி பாரிசர், திருத்தந்தை பதினான்காம் லியோவின் முதல் திருத்தூது மடலான ‘மாண்புமிகு மனித நேயம்’ குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

அமெரிக்க தொழில்நுட்ப நிபுணரும் தொழில்முனைவோருமான எலி பாரிசர் அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதல் திருத்தூது மடலான மாண்புமிகு மனித நேயம் எனும் மடலைப் பாராட்டியுள்ளார்.

தற்போதைய செயற்கை நுண்ணறிவு காலத்திற்கான மிகவும் தேவையான மற்றும் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறநெறி வழிகாட்டி என்று அந்த மடலை வர்ணித்துள்ள எலி பாரிசர் அவர்கள், தற்போது செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது தீவிர தொழில்நுட்பப் போட்டி மற்றும் பொருளாதாரம் சார்ந்த நலன்களால் மட்டுமே உந்தப்படுவதாகவும், அறநெறி மற்றும் மனித அக்கறைகளுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த விடயத்தில் உலகிற்கு அறநெறி சார்ந்த தலைமைத்துவம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்று கூறிய பாரிசர் அவர்கள்,  மனித மாண்பையும் வளர்ச்சியையும் உரையாடலின் மையப்பகுதியாக மாற்றியதற்காக திருத்தந்தை அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தூது மடல் திருஅவையின் எல்லையையும் தாண்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறிய பாரிசர் அவர்கள், _செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இணைய சமூகங்களுக்கு இடையே இந்த திருத்தூது மடல் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது என்றும்,  இது செயற்கை நுண்ணறிவின் அறநெறி மற்றும் ஆன்மீக பரிமாணங்களைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும் மனித ஆணவத்திற்கும் தொழில்நுட்ப எல்லை மீறல்களுக்கும் ஒரு உருவகமாக பாபிலோன் கோபுரத்தைக் ஒப்பிட்டுக் காட்டியுள்ள திருத்தந்தையின் குறிப்பை அவர் எடுத்துரைத்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவை நிராகரிப்பதற்குப் பதிலாக, அது மனிதகுலத்தைக் கட்டுப்படுத்தாதவாறு மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும், பொறுப்பான முறையில் அதனை உருவாக்க முன்வருமாறு திருத்தந்தை தனது முதல் திருத்தூது மடலின் வழியாக உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்றும் பாரிசர் அவர்கள் கூறியுள்ளார்.

"செயற்கை நுண்ணறிவால் மனித உறவுகளையும் சமூகத்தையும் வலுப்படுத்தவும் முடியும் அதே வேளையில் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கத்தால் மக்களைத் தனிமைப்படுத்தவும் முடியும்" என்று எச்சரித்துள்ள பாரிசர் அவர்கள், "இப்போதும் கூட செயற்கை நுண்ணறிவு அதன் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், அதன் வளர்ச்சியைப் பொதுநலனை நோக்கி வழிநடத்த மனிதசமூகத்திற்கு ஒரு வாய்ப்பு உள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தூது மடல் விடுத்துள்ள "செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைத் தணித்தல்" என்ற அழைப்பை எதிரொலித்த பாரிசர் அவர்கள், பொருளாதார இலாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், உண்மை, மனித மாண்பு மற்றும் சமூக நலனை ஊக்குவிக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் பொறுப்பை அரசுகளும், நிறுவனங்களும், குடிமக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

04 ஜூன் 2026, 12:27