pope leo xiv pope leo xiv  (ANSA)

மனமாற்றத்திற்கும் புதுப்பித்தலுக்கும் நம் இதயங்களைத் திறப்போம்!

ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜூன் 10 அன்று மொன்செராட் அன்னை மரியாவின் மடாலயத்தில் நடைபெற்ற திருஜெபமாலை செப நிகழ்வில் பங்கேற்ற திருத்தந்தை, அன்னை மரியா கானா திருமண விழாவில் கூறிய “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்ற வார்த்தைகளை நினைவூட்டினார். கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இயேசுவின் அன்பையும், இரக்கத்தையும், ஒப்புரவையும் ஏற்றுக்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜூன் 10, புதன்கிழமை, ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பார்சிலோனாவுக்கு அருகிலுள்ள மொன்செராட் அன்னை மரியாவின் மடாலயத்தில் நடைபெற்ற திருஜெபமாலை செப நிகழ்வில் பங்கேற்றார். அங்கு ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், இறைமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாற்றினார். அந்நிகழ்வில் திருத்தந்தை ஆற்றிய உரை:

அன்பான சகோதர சகோதரிகளே,

ஆயர் சேவியர் கோமஸ் கார்சியா (Bishop Xavier Gómez García), அபேட் மானெல் காச் (Abbot Manel Gasch), ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவற சகோதர சகோதரிகள் மற்றும் இன்று இங்கு கூடியிருக்கும் குழந்தைகள் உட்பட அனைத்து நம்பிக்கையாளர்களையும் நான் அன்போடு வாழ்த்துகிறேன். உங்கள் வருகைக்கும் அன்பான வரவேற்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நீதியையும் அமைதியையும் நாடி ஏங்கும் இவ்வுலகில், எனது பணியையும் திருஅவையின் தூதுப்பணியையும் மொன்செராட் அன்னை மரியாவின் தாய்மைப் பாதுகாப்பிலும் பரிந்துரைப்பிலும் ஒப்படைக்க அவரது திருப்பாதங்களில் நிற்பது எனக்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

பல நூற்றாண்டுகளாக, இந்தத் திருத்தலம் ஜெபம், நம்பிக்கை, நன்றியுணர்வு மற்றும் நம்பிக்கையின் இடமாகத் திகழ்ந்து வருகிறது. எண்ணற்ற திருப்பயணிகள் இறைவார்த்தை அன்னையின் அன்பான பாதுகாப்பைத் தேடி இங்கு வந்துள்ளனர். மேலும், கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் சாட்சியத்தையும், மரியாவின் முன்னிலையில் ஆறுதலும் வலிமையும் கண்டுகொண்ட தலைமுறையினரின் நம்பிக்கையையும் நினைவூட்டும் இடமாகவும் இது விளங்குகிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்விலும் மரியா ஒரு மைய இடத்தை வகிக்கிறார் என்று எனது முன்னோடி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமக்கு நினைவூட்டினார். அவளுக்கு முன்பாக, நம் இதயங்கள் மனமாற்றத்திற்கும் புதுப்பித்தலுக்கும் திறக்கப்படுகின்றன. புனித லொயோலா இக்னேசியஸ்,கன்னி மரியாவிடம் தன்னை ஒப்படைத்து, கிறிஸ்துவை இன்னும் உண்மையாகப் பின்பற்றத் தேர்ந்தெடுத்தபிறகு, தனது வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தை இந்த இடத்தில் தான் தொடங்கினார்.

இன்று, கானாவூர் திருமண விழாவில் மரியா கூறிய, "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்ற வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை கேட்க உங்களை அழைக்கிறேன். இந்த எளிய வார்த்தைகள் கிறிஸ்தவ வாழ்விற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கின்றன. மரியா எப்போதும் நம்மை இயேசுவிடம் அழைத்துச் சென்று, அவருடைய குரலுக்குச் செவிசாய்க்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறாள். நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய வேண்டும் என்று கிறிஸ்து நமக்கு அழைப்பு விடுக்கிறார். அத்தகைய அன்பு, இரக்கம், மன்னிப்பு, உண்மை மற்றும் அமைதிக்காக நம் இதயங்களைத் திறக்கிறது.

இருப்பினும், பல நேரங்களில் நாம் பெருமை, கசப்புணர்வு, பயம் அல்லது கோபம் என்னும் கவசத்தால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள அனுமதிக்கிறோம். அந்தக் கவசங்களைக் களைந்துவிட்டு, கடவுளின் அன்பின் மாற்றிமைக்கும் ஆற்றலை ஏற்றுக்கொள்ளுமாறு மரியா நம்மை அழைக்கிறாள். அவள் தன் கைகளில் ஏந்தியிருக்கும் குழந்தை இயேசுவும், நமக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவும், உண்மையான வலிமை வன்முறையில் இல்லை, மாறாகத் தன்னைத்தானே கையளிக்கும் அன்பில் தான் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார்கள்.

அமைதியின் அரசியான அன்னை மரியாவிடம், தீங்கு விளைவிக்கும் வார்த்தைகள், தீர்ப்பு வழங்குதல், புறம்பேசுதல் மற்றும் பிரிவினைகளை நிராகரிக்க நமக்கு உதவுமாறு மன்றாடுவோம். நம் குடும்பங்கள், சமூகங்கள், பணியிடங்கள் மற்றும் சமுதாயத்தில் அன்பைக் கட்டியெழுப்ப அவள் நமக்குக் கற்றுத் தருவாளாக. நாம் ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாக அங்கீகரிப்போம்; அதன் மூலம் நம்பிக்கை வெறுப்பை வெல்லட்டும், அமைதி பிரிவினையை முறியடிக்கட்டும்.

திருஅவையின் தாயான மரியா, எப்போதும் நம்மை இயேசுவிடம் அழைத்துச் செல்வாளாக. ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

10 ஜூன் 2026, 14:32