தேடுதல்

இளையோருடன் திருத்தந்தை இளையோருடன் திருத்தந்தை  

ஏழைகளுக்கு அடைக்கலமாக இருக்க கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை!

2026ஆம் ஆண்டு உலக ஏழைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில், சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்ட ஏழைகள் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, தங்களது குரலையும் மனித மாண்பையும் இழந்து வருகின்றனர் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கவலை தெரிவித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

இன்றைய ஏழைகள் பலரால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும் சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களாகவும் உள்ளனர் என்றும், அவர்களிடமிருந்து அன்றாட வாழ்வாதாரம் மட்டுமல்ல, அவர்களின் குரலும் மனித மாண்பும் பறிக்கப்பட்டுள்ளன என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

“ஆண்டவர் ஏழைகளின் அடைக்கலம்” (திருப்பாடல் 14) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 2026 நவம்பர் 15 அன்று கடைப்பிடிக்கப்படவுள்ள 10 - வது உலக ஏழைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இன்றைய உலகில் சமூக அநீதி, ஊழல் மற்றும் ஆதிக்க மனப்பான்மை அதிகரித்து வருவதாகவும், அவற்றின் பாதிப்புகளை முதலில் அனுபவிப்பவர்கள் ஏழைகளே என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் டிஜிட்டல் உலகமும் சில நேரங்களில் பாகுபாடுகளையும் அலட்சியத்தையும் அதிகரித்து, ஏழைகளின் குரலை மௌனமாக்குவதாக கவலை தெரிவித்த திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் இறைவனிடம் அடைக்கலம் தேடுவதோடு மட்டுமல்லாமல், ஏழைகளுக்கே அடைக்கலமாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்தியாவசியமானவற்றோடு வாழும் ஏழைகள், இறைவனை தங்கள் உண்மையான அடைக்கலமாக அறிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள் என்றும் கூறிய திருத்தந்தை, திருஅவை  சிறியோருக்கும் ஏழைகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன் ஏழைகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக அவர்களுடன் இணைந்து நடக்கவும், அவர்களது குரலைக் கேட்கவும் நம்பிக்கையாளர்களை திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, இந்த 10வது  உலக ஏழைகள் தினம், இறைவனில் அடைக்கலம் தேடும் ஏராளமான சகோதர சகோதரிகளின் முகங்களை மீண்டும் கண்டறிய கிறிஸ்தவர்களுக்கு உதவட்டும் என்று கூறி தனது செய்தியை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

15 ஜூன் 2026, 09:02