தேடுதல்

Hebrew University of Jerusalem பல்கலைக்கழகத்தின் ஆளுநர் குழு உறுப்பினர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ வத்திக்கானில் வரவேற்றபோது. Hebrew University of Jerusalem பல்கலைக்கழகத்தின் ஆளுநர் குழு உறுப்பினர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ வத்திக்கானில் வரவேற்றபோது.  (@VATICAN MEDIA)

அமைதியை கட்டியெழுப்பும் தலைமுறையை உருவாக்க பல்கலைக்கழகங்களுக்கு திருத்தந்தை அழைப்பு!

மரியாதைமிக்க உரையாடலின் மூலம் தவறான புரிதல்களையும் அவநம்பிக்கையையும் படிப்படியாக களைந்திட முடியும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வன்முறையும் கடுமையான கருத்து மோதல்களும் அதிகரித்து வரும் இன்றைய உலகில், பல்கலைக்கழகங்கள் உண்மையான அமைதியை உருவாக்கும் “அமைதியின் கைவினைஞர்களை” உருவாக்க வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஜூன் 18, வியாழனன்று, Hebrew University of Jerusalem பல்கலைக்கழக ஆளுநர் குழு உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு குறிப்பிட்ட  திருத்தந்தை, உரோம் நகரம் கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாக மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மக்களின் சந்திப்பிடமாகவும் இருந்து வருவதை எடுத்துக்காட்டினார்.

பல்கலைக்கழகங்கள் அறிவைப் பகிர்ந்துகொள்ளும் இடங்களாக மட்டுமல்லாமல், உரையாடல் மற்றும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் மனப்பான்மையை  வளர்க்கும் இடங்களாகவும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மரியாதைமிக்க உரையாடலின் மூலம் தவறான புரிதல்களையும் அவநம்பிக்கையையும் படிப்படியாக களைந்திட முடியும் என்று கூறிய திருத்தந்தை, உலகிற்கு அமைதியைக் கொண்டுவர இறைவன் நம்மை அழைக்கிறார் என்றும், அந்தப் பயணம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக, அமைதியை உருவாக்கும் மனிதர்களை உருவாக்குவதன் மூலம், பல்கலைக்கழகங்கள் பிளவுபட்ட உலகிற்கு நம்பிக்கையும் ஒற்றுமையும் வழங்கும் ஒளிக்கலங்கரையாக தொடர்ந்து விளங்க வேண்டும் என்று  அழைப்பு விடுத்து திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

19 ஜூன் 2026, 08:39