சிதறும் அறிவும், சவால்விடும் செயற்கை நுண்ணறிவும் : மாணவர்களை நல்வழிப்படுத்த திருத்தந்தை அழைப்பு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவப் பின்னணியில் இயங்க வேண்டும் என்றும், மாணவர்கள் கிறிஸ்துவைக் கண்டறிவதற்கும், நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான வாழ்க்கை நோக்கத்தைப் பெறுவதற்கும் கல்வியாளர்கள் வழிகாட்ட வேண்டும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஜூன் 03, புதனன்று, உரோமில் 2026-ஆம் ஆண்டு கருத்தரங்கிற்காகக் கூடியிருந்த, அமெரிக்காவின் கத்தோலிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் சங்கப் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, கத்தோலிக்கக் கல்வி என்பது வெறும் அறிவை மட்டும் தராமல், உண்மையின் முழுவடிவமான கிறிஸ்துவைத் தேட மாணவர்களைத் தூண்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கிறிஸ்துவை மையமாகக் கொண்ட உண்மைப் பற்று இல்லாவிட்டால், இளைஞர்கள் உண்மையை அறிவதிலும், நல்வாழ்க்கை வாழ்வதிலும் தடுமாற நேரிடும் என்றும் திருத்தந்தை கவலை தெரிவித்தார்.
தனது மாண்புமிகு மனிதநேயம் என்ற திருத்தூதுமடலை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, நவீன உலகில் அறிவு சிதறிக்கிடப்பதாகக் கவலை தெரிவித்ததுடன், மக்கள் குறிப்பிட்ட துறைகளில் நிபுணர்களாக இருந்தாலும், அறிவு, வாழ்க்கை மற்றும் மனித இதயத்தின் தேடல்களை இணைக்கும் பரந்த புரிதல் அவர்களுக்குக் குறைபடுகிறது என்று குறிப்பிட்டார்.
கல்வியில் செயற்கை நுண்ணறிவின் சவால்கள் குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, தொழில்நுட்பம் வாய்ப்புகளைத் தந்தாலும் மாணவர்களின் பகுத்தறிவு, நினைவாற்றல் மற்றும் பொறுப்புணர்வு பாதிக்கப்படாமல் இருப்பதை கல்வியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும், புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் விவேகத்துடன் பயன்படுத்த கல்வி நிறுவனங்கள் அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் நற்போதனைகளையும் நெறிமுறைகளையும் வழங்கி, மாணவர்களின் வாழ்வையும் சமூகத்தின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் திருஅவையின் பணியைத் தொடர்ந்து செய்யும் என்ற தனது நம்பிக்கையை தெரிவித்து திருத்தந்தை தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
