ஒவ்வொரு எளிய மனிதரின் உருவிலும் இயேசு வரவேற்கப்படுகிறார்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஜூன் 06, சனிக்கிழமையன்று, திருத்தந்தை ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒரு நிகழ்வாக அந்நாட்டின் தலைநகரான மாட்ரிட்டின் லூசெரோ பகுதியில் அமைந்துள்ள 'செடியா சமூக சேவை மையம்' என்ற கத்தோலிக்க தொண்டு நிறுவனத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சென்றார். அங்கு அடைக்கலம் புகுந்திருந்த எளிய மக்கள், வறுமை மற்றும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் தன்னார்வலர்களை திருத்தந்தை சந்தித்தார். அச்சந்திப்பின்போது இடம்பெற்ற திருத்தந்தை அவர்களின் உரை.
அன்புள்ள சகோதர, சகோதரிகளே
உங்கள் மத்தியில் மாட்ரிட் நகருக்கான எனது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னை ஒரு குடும்ப உறுப்பினராக உணரச் செய்த உங்களது கனிவான வரவேற்பிற்கு எனது நன்றிகள். இந்த இல்லத்தில் எவரும் தனிமையாய் விடப்படுவதில்லை; ஒவ்வொருவரின் மகிழ்ச்சியும் துயரமும் இங்குள்ள அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்த ஆவிக்குரிய மனநிலை நற்செய்தியின் விழுமியங்களையும், நம் மனிதத்தன்மையில் பங்குகொண்டு, துன்புறும் மக்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியையும் எமக்கு வெளிப்படுத்துகிறது.
கடவுள் எவ்வாறு எளிய இரக்கச் செயல்களின் வழியாகச் செயலாற்றுகிறார் என்பதை இன்று நாம் கேட்ட கதைகள் வெளிப்படுத்துகின்றன. பிறரன்புப் பணி என்னும் திறக்கப்பட்ட ஒரு சிறிய கதவின் வழியாக, மனிதர்களின் வாழ்க்கையே மாறியிருக்கிறது. நியூர்கா (Niurka) தனது குழந்தைகளுக்கான ஆதரவையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கண்டடைந்தார். காத்ரி (Khadri) பெருந்தொற்றின் துயரங்களையும் நிலையற்ற தன்மையையும் கடந்து, தனது மாண்பு, வேலை மற்றும் பிறருக்கு உதவும் விருப்பத்தை மீண்டும் கண்டுகொண்டார். அலிசியாவும் (Alicia) பல தன்னார்வலர்களும் பெண்கள் தங்களின் புதுப்பிக்கப்பட்ட மாண்பு, சுயசார்பு மற்றும் நம்பிக்கையை நோக்கிய பயணத்தில் அவர்களுக்குத் துணையாக இருக்கிறார்கள்.
இன்று நம்முன் வைக்கப்பட்ட அடையாளங்கள் நமக்கு மிக ஆழமான செய்தியைத் தருகின்றன. குழந்தைகளின் திருப்பெயர்கள் பொறிக்கப்பட்ட அந்த ரிப்பன் , ஒவ்வொரு புதிய உயிர் எனும் இறைக்கொடையைக் கொண்டாடி மகிழ்கிறது. குடியிருப்பு அங்கீகார ஆவணம் என்பது இன்முக வரவேற்பு, நேர்மை மற்றும் சமூக இணைப்பைப் பிரதிபலிக்கிறது. காலணிஒவ்வொரு மனித நபரின் புனிதத்தன்மையை நமக்கு நினைவுறுத்துகிறது; இறைவனின் திருமுன் ஒவ்வொரு மனித வாழ்வும் ஒரு புனித பூமி என்பதை அது நமக்கு உணர்த்துகிறது.
வாழும் கிறிஸ்மஸ் குடிலும் கிறிஸ்துவின் நற்செய்தியும்
உங்களுடைய சான்றுகள், இன்றும் நற்செய்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. எண்ணற்ற தாராள மனப்பான்மையின் செயல்கள் வழியாக, கிறிஸ்து இன்றும் இந்த உலகில் செயலாற்றுகிறார். நாம் இங்கே காண்பது ஒரு வாழும் குடில் ஆகும்; உதவியையும் ஆறுதலையும் அடைக்கலத்தையும் தேடி நம்மை நாடி வரும் ஒவ்வொரு எளிய மனிதரின் உருவிலும், இயேசு கிறிஸ்து நாள்தோறும் இங்கே இன்முகத்தோடு வரவேற்கப்படுகிறார்.
இந்தப் பயணத்தின் மையப்பொருள் , 'உங்களைச் சுற்றிப் பாருங்கள்' என்ற இயேசுவின் அழைப்பாகும். இந்த வார்த்தைகள் பிறருடைய தேவைகளை நாம் கண்டறியவும், காலம் தாழ்த்தாமல் அவற்றுக்கு உதவவும் நம்மை அழைக்கின்றன. பிறரன்புப் பணி காத்திருக்காது. தேவையிலிருக்கும் ஒரு மனிதரை நாம் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும், இறை அருளின் தனித்துவமான தருணமாகவும், அன்பைச் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. கிறிஸ்துவின் அன்பு நம் சகோதர சகோதரிகளை நோக்கிச் செல்லவும், தாராள மனதோடும் இரக்கத்தோடும் அவர்களைப் பராமரிக்கவும் நம்மைத் தூண்டுகிறது.
விசுவாசத்தின் வேர்களும் துடிப்புள்ள இதயத்தின் சவாலும்
திருஅவையின் பணி இந்த பிறரன்புப் பணியில்தான் வேரூன்றியுள்ளது. ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்கள் மீது காட்டும் அக்கறையிலிருந்து, நம் இறை நம்பிக்கையை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அன்பு, சேவை மற்றும் ஒருமைப்பாடு போன்ற உறுதியான செயல்களின் வழியாகவே வெளிப்படுத்தப்படுகிறது என்பதை நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது.
இயேசுவின் அழைப்பு, எப்போதும் திறந்த மனதுடனும் இரக்கத்துடனும் இருக்கும் இதயங்களை உருவாக்க நமக்கு சவால் விடுக்கிறது. பிறர் மீதான அலட்சியத்தையும், சுயநலத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். துடிப்புள்ள இதயம் என்பது எப்போதும் அன்பின் வெம்மையும், மிகுந்த பரிவும் கொண்டு, பிறருக்குத் தொண்டு செய்யத் துடித்துக்கொண்டிருக்கும். ஆனால், குளிர்ந்த இதயமோ சுயநலத்தால் தன்னை மூடிக்கொண்டு, அன்பு செய்யும் உன்னத ஆற்றலையே இழந்துவிடுகிறது.
பொருள் கடந்த உதவி: மனித மாண்பை மீட்டெடுக்கும் சகோதரத்துவம்
எல்லாவற்றிற்கும் மேலாக, நமது உதவி என்பது வெறும் பொருள் சார்ந்த ஆதரவாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அது சகோதர சகோதரிகளுக்கு இடையேயான ஒரு சந்திப்பாக மாற வேண்டும். உண்மையான பிறரன்புப் பணி என்பது பிறரின் குரலுக்கு மதிப்பளித்து, அவர்களைப் புரிந்து, அவர்களின் வாழ்வில் துணையாக நின்று, அந்த மனிதரின் முழுமையான சுயமரியாதையையும் மாண்பையும் மீட்டெடுப்பதே ஆகும்.
இறுதியாக, உங்கள் அனைவரையும், உங்களது பணிகளையும் தூய கன்னி மரியாவின் பராமரிப்பில் ஒப்படைக்கிறேன். தேவையிலிருக்கும் அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்கவும், அவர்களுக்குத் துணையாக இருக்கவும், சேவை செய்யவும் அவரது தாயன்பு நம்மை ஊக்குவிக்கட்டும்; அதன் மூலம் இறைவனின் இரக்கத்தை இவ்வுலகில் நாம் கண்முன்னே காணச் செய்வோம்.
இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
