திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

புலம்பெயர்ந்தோரின் குரலை உலகிற்கு எடுத்துச் செல்லும் திருத்தந்தை

ஸ்பெயினுக்கான தனது முதல் திருத்தூதுப் பயணத்தின் நிறைவாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கேனரி தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு, புலம்பெயர்ந்தோரின் துயரங்கள் மற்றும் மனித மாண்பு குறித்த திருஅவையின் அக்கறையை உலகிற்கு எடுத்துரைக்கிறார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயினுக்கான தனது முதல் திருத்தூதுப் பயணத்தின் நிறைவாக வரும் ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் கேனரி தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். உலகின் மிகவும் ஆபத்தான புலம்பெயர்வுப் பாதைகளில் ஒன்றான அட்லாண்டிக் வழித்தடத்தின்‌ மூலம் வரும் புலம்பெயர்ந்தோர் குறித்த திருஅவையின் அக்கறையை திருத்தந்தையின் இந்தப் பயணம் வெளிப்படுத்துகிறது.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற புலம்பெயர்வு நெருக்கடியின் போது ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நெரிசலான சூழலில் வந்தடைந்ததால் “அவமானத்தின் துறைமுகம்” என்று அறியப்படும் அர்குயினெகுயின் துறைமுகத்திற்கு திருத்தந்தை செல்வது இப்பயணத்தின்  ஒரு முக்கிய நிகழ்வாக அமைய உள்ளது.

அங்கு அவர் புலம்பெயர்ந்தோர், தன்னார்வலர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்களை வரவேற்பதில் ஈடுபட்டுள்ள அமைப்புகளைச் சந்திப்பார். இந்தப் பயணத்தின் போது கடலில் உயிரழந்தவர்களுக்காக செபிப்பது உள்ளிட்ட புலம்பெயர்வின் போது உயிரிழந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெறும்.

ஆயர் ஜோஸ் மசுலோஸ் அவர்கள், திருத்தந்தையின் வருகையை ஒரு ஆற்றல்மிக்க ஒற்றுமையின் அடையாளம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்களின் புலம்பெயர்ந்தோர் சார்ந்த மேய்ப்புப் பணியின் தொடர்ச்சி என்றும் விவரித்தார்.

மேலும் "இந்தப் பயணம் உடனடி உதவி, புலம்பெயர்ந்தோரை ஒருங்கிணைத்தல், மற்றும் வறுமை, போர், சுரண்டல், மனித கடத்தல் உள்ளிட்ட புலம்பெயர்வின் அடிப்படை காரணங்களை நிவர்த்தி செய்தல் ஆகிய மூன்று முன்னுரிமைகளில் திருஅவையின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது" என்றும் ஆயர் ஜோஸ் மசுலோஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அடையாளப் பூர்வமாக “அவமானத்தின் துறைமுகம்" என்று அறியப்படும் அர்குயினெகுயினை “நம்பிக்கையின் துறைமுகமாக” மாற்றுவதே திருத்தந்தையின் இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

புலம்பெயர்ந்தோர் வெறும் எண்கள் அல்ல, அவர்கள் மாண்புள்ள மனிதர்கள் மற்றும் அவர்கள் சமூகத்திற்கு “நம்பிக்கையின் ஆசிரியர்களாக” இருக்க முடியும் என்பதே திருத்தந்தையின் தெளிவான செய்தி.

மனித மாண்பும் கிறிஸ்தவ ஒற்றுமையும் வாழ்ந்து காட்டப்படும் மற்றும் பாதுகாக்கப்படும் ஒரு முக்கியமான இடமாக கேனரி தீவுகள் இருப்பதை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஜூன் 2026, 12:28