தேடுதல்

உலக கருணை திருத்தூது மாநாடு: கடவுளின் கருணையே மனிதகுலத்தின் உண்மையான நம்பிக்கை

போர்களும் கவலைகளும் நிறைந்த இன்றைய சூழலில், மனித இதயங்களிலும் நாடுகளுக்கிடையேயும் அமைதி நிலவ வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை வலியுறுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மனிதகுலத்தின் உண்மையான நம்பிக்கை கடவுளின் அளவற்ற கருணையில் தான் உள்ளது என்று வலியுறுத்திய திருத்தந்தை, கடவுளின் கருணையை அனுபவிப்பது மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது என்றும், நம்பிக்கையைப் புதுப்பிக்கிறது மற்றும் கடவுளின் அன்பான அரவணைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

ஜூன் 07, ஞாயிறன்று, லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் ஜூன் 7 முதல் ஜூன் 12 வரை இடம்பெற்று வரும் ஆறாவது உலக கருணை திருத்தூது மாநாட்டின் (WACOM 6) தொடக்க நிகழ்வை முன்னிட்டு அந்நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கிய காணொளிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட ஒரு முயற்சியான, ஆறாவது உலக கருணை திருத்தூது மாநாட்டை வாழ்த்திய திருத்தந்தை, வில்னியஸின் பேராயர் கின்தாராஸ் க்ருஷாஸ், லிதுவேனிய அதிபர் கிதானாஸ் நௌசேதா மற்றும் கிழக்கு மரபுவழித் திருஅவையின் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு ஆகியோருக்கு தனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பயமும் கவலையும், மோதல்களும் போர்களும் நிறைந்துள்ள இவ்வுலகில், மனித இதயங்களிலும் நாடுகளுக்கு இடையேயும் அமைதிக்கான அவசரத் தேவையை வலியுறுத்திய திருத்தந்தை, கடவுளின் கருணைக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும், உடைந்த உறவுகளைக் குணப்படுத்தும், மற்றும் அன்பு மற்றும் மன்னிப்பைத் தூண்டும் ஆற்றல் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

கருணையே கடவுளின் உண்மையான முகத்தை பிரதிபலிக்கிறது என்றும், மேலும், நம்பிக்கையாளர்களை அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் கருவிகளாக மாற்றுகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுள் கருணையைக் காட்டுவதில் சோர்வடைவதே இல்லை என்றும், அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் பங்கேற்பாளர்களுக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, உலகம் இரக்கத்திற்காகவும் குணப்படுத்துதலுக்காகவும் ஆழமாக ஏங்குவதால், கிறிஸ்தவர்கள் கடவுளின் கருணையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தங்களின் சொந்தக் குடும்பங்களுக்குள்ளிருந்து தொடங்கி, இன்னும் அதிகமாக வரவேற்கும் பண்புகொண்ட, இரக்கமுள்ள மற்றும் கருணையுள்ள ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக,வில்னியஸில் தங்களுக்குக் கிடைத்துள்ள காலத்தைப் பொன்னானதாக மாற்றிக்கொள்ளுமாறும், இந்த மாநாட்டின் ஆன்மீக வளமையைத் தங்களின் சொந்தச் சமூகங்களுக்கு எடுத்துச் செல்லுமாறும் நம்பிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, கடவுளின் கருணை தொடர்ந்து அவர்களை வழிநடத்தி வலுப்படுத்த வேண்டும் என்று இறைவேண்டல் செய்து, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது திருத்தூது ஆசிரை வழங்கி காணொளிச் செய்தியை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூன் 2026, 14:36