இறைவனின் அன்பே மனித வாழ்வின் உண்மையான நிறைவு!

ஸ்டியூபென்வில் கோடைக்கால இளைஞர் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், திருத்தந்தை, புனித பிரான்சிஸ் அசிசியின் வாழ்விலிருந்து அமைதி மற்றும் நிறைவான மகிழ்ச்சி பற்றிய பாடங்களை எடுத்துரைத்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

புனித பிரான்சிஸின் வாழ்வில் ஒளிர்ந்த இரண்டு முக்கிய பண்புகளாக அமைதியையும் மகிழ்ச்சியையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இளைஞர்கள் தங்கள் குடும்பங்களிலும் சமூகங்களிலும் உலகளாவிய அளவிலும் இறையமைதியின் தூதுவர்களாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஸ்டியூபென்வில் கோடைக்கால இளைஞர் மாநாடுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, கிறிஸ்துவை இதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே உண்மையான அமைதி கிடைக்கும் என்றும், அது மனித முயற்சியால் மட்டும் உருவாகும் ஒன்றல்ல என்றும் வலியுறுத்தினார்.

புனித பிரான்சிஸ் அசிசியின் வாழ்வை மேற்கோள்காட்டி, உண்மையான அமைதி மற்றும் நிறைவான மகிழ்ச்சி குறித்து சிந்திக்க அழைப்பு விடுத்த திருத்தந்தை, வாழ்க்கையின் வெற்றி, வசதி, புகழ் அல்லது உலகப் பாராட்டுகள் மனிதனுக்கு நிலையான மகிழ்ச்சியை வழங்க முடியாது என்றும், மாறாக, துன்பங்களையும் சவால்களையும் இறைவன் மீது நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு வாழ்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி காணப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

புனித பிரான்சிஸ் அசிசியின் இறப்பின் 800ஆம் ஆண்டு நினைவும், ஸ்டியூபென்வில் இளைஞர் மாநாடுகளின் 50ஆம் ஆண்டு நிறைவும் கொண்டாடப்படும் இவ்வேளையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டது.

சமூக ஊடகங்கள், தொழில்நுட்ப வசதிகள், செல்வச் செழிப்பு, புகழ், போதைப்பொருட்கள் அல்லது வெளிப்புற இன்பங்கள் ஆகியவற்றில் நிரந்தர மகிழ்ச்சியைத் தேடுவது பயனற்றது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவன் ஒவ்வொருவரையும் அளவற்ற அன்புடன் நேசிக்கிறார் என்பதை உணர்வதிலும், செப வாழ்வு மற்றும் திருவழிபாடுகள் வழியாக அவருடன் நெருங்கிய உறவை வளர்ப்பதிலும்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்று எடுத்துக்காட்டினார்.

இளைஞர்கள் தங்களது வாழ்வில் இறைவன் வழங்கும் அழைப்பை தைரியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மொழிந்த திருத்தந்தை, திருமண வாழ்வு, குருத்துவம், துறவறம் அல்லது மறைப்பணித் தொண்டு என எந்த அழைப்பாக இருந்தாலும், இறைவனின் அன்பிலும் வழிகாட்டுதலிலும் நம்பிக்கை வைத்து தாராளமாக பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இறுதியாக, உண்மையான அமைதியும் நிறைவான மகிழ்ச்சியும் உலகம் வழங்குவதல்ல; அவை இறைவனிடமிருந்து வரும் அரிய கொடைகள் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவோடு ஆழமான உறவை வளர்த்து வாழ இளைஞர்களை ஊக்குவித்து தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

20 ஜூன் 2026, 12:15