ஸ்பெயின் மக்களுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஸ்பெயின் மக்களின் அன்பான வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை, அந்நாட்டு மக்களுக்கு “உங்கள் பார்வையை உயர்த்துங்கள்” என்ற ஆன்மீக அழைப்பையும் விடுத்தார்.
ஜூன் 12, வெள்ளியன்று, திருத்தந்தை அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொண்ட தனது திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளில் சாந்தா குரூஸ் டெ தெனெரிபே துறைமுகத்தில் இடம்பெற்ற திருப்பலியின் முடிவில் உரையாற்றியபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
மாட்ரிட், பார்சிலோனா, மொன்செராட் மற்றும் கனாரித் தீவுகள் உள்ளிட்ட பல இடங்களை உள்ளடக்கிய ஆறு நாள் திருத்தூதுப் பயணத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை, “இந்தப் பயணத்தின் போது நான் பெற்ற அன்பும் பாசமும் என்னை ஆழமாக நெகிழச் செய்துள்ளது” என்றும், மேலும், பயண ஏற்பாடுகளில் பங்களித்த அனைவருக்கும், நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஸ்பெயின் நாட்டின் வலுவான கத்தோலிக்க பாரம்பரியத்தைப் பாராட்டிய திருத்தந்தை, நாட்டின் பல பகுதிகளில் தாம் கண்ட நம்பிக்கையின் சாட்சிகளும் திருஅவையின் மீதான அன்பும் தமக்கு மிகுந்த ஆறுதலாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
சாந்தா குரூஸ் என்ற பெயர் “புனித சிலுவை” என்று பொருள்படுவதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, உலகம் முழுவதும் போர், வன்முறை மற்றும் பல்வேறு துன்பங்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக இறைவேண்டல் செய்வதாக கூறினார்.
பயணத்தின் முழக்கமாக இருந்த “உங்கள் பார்வையை உயர்த்துங்கள்” என்ற வார்த்தைகளை மீண்டும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, “சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை நோக்கி நமது கண்களை உயர்த்துவோம்” என்ற அழைப்பு விடுத்ததுடன், மனிதகுலத்திற்கு மீட்பையும் நம்பிக்கையையும் வழங்கும் இரக்கத்தின் ஊற்றாக கிறிஸ்துவின் திருஇதயம் விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உண்மையான மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கு மனிதகுலம் மன்னிப்பையும் நல்லிணக்கத்தையும் தேட வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, துன்புறும் அனைவரையும் அன்னை மரியாவின் தாய்மைப் பாதுகாப்பிற்கு ஒப்படைத்து, “துன்புறும் அனைவரின் தாயாகிய மரியாளைப் போல நாமும் நமது பார்வையை உயர்த்துவோம்” என்று அழைப்பு விடுத்தார்.
இறுதியாக, ஸ்பெயின் நாட்டு மக்களுக்கு மீண்டும் தனது நன்றியை தெரிவித்த திருத்தந்தை, “கிறிஸ்துவிலும் புனித திருஅவையிலும் நாம் செபத்திலும் ஒற்றுமையிலும் இணைந்திருப்போம்” என்று அழைப்பு விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
