கர்தினால் கமில்லோ ரூயினி கர்தினால் கமில்லோ ரூயினி 

கர்தினால் ரூயினியின் சேவையைப் போற்றிய திருத்தந்தை!

உரோம் மறைமாவட்டத்தின் மேனாள் முதன்மை அருள்பணியாளரும், இத்தாலிய ஆயர்கள் மாநாட்டின் மேனாள் தலைவருமான கர்தினால் கமில்லோ ரூயினி (95) ஜூன் 16 அன்று காலமானார். இதையடுத்து ஜூன் 17 அன்று வெளியிடப்பட்ட தந்திச் செய்தியில் திருத்தந்தை லியோ XIV தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

ஜூன் 16, செவ்வாயன்று, உரோம் மறைமாவட்டத்தின் மேனாள் முதன்மை அருள்பணியாளரும் , இத்தாலிய ஆயர்கள் மாநாட்டின் மேனாள் தலைவருமான கர்தினால் கமில்லோ ரூயினி (95) காலமானதைத் தொடர்ந்து, திருத்தந்தை வெளியிட்டுள்ள  தந்திச் செய்தியில் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 17, புதனன்று, வெளியிடப்பட்டுள்ள தந்திச் செய்தியில் இவ்வாறு தெரிவித் துள்ள திருத்தந்தை, கர்தினால் ரூயினி அவர்களை “ஆழ்ந்த நம்பிக்கை, கூர்ந்த அறிவு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட அனுபவமிக்க, ஞானமிக்க திருஅவை சகோதரர்” எனப் புகழ்ந்தார்.

மேலும், இத்தாலிய ஆயர்கள் மாநாட்டின் தலைவராக அவர் ஆற்றிய சிறப்பான சேவையையும், கலாச்சார உலகத்துடன் அவர் மேற்கொண்ட பயனுள்ள உரையாடல்களையும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ரூயினியின் வாழ்க்கையும் திருஅவைக்கான அர்ப்பணிப்பும் கடவுளின் அரிய வரமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

1931 ஆம் ஆண்டு இத்தாலியின் சாச்சுவோலோவில் பிறந்த ரூயினி, 1954 இல் குருத்துவப் பட்டம் பெற்றார். 1991 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவரை கர்தினாலாக நியமித்தார். பின்னர் உரோம் மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராகவும், இத்தாலிய ஆயர்கள் மாநாட்டின் தலைவராகவும் பணியாற்றினார். அவர் இத்தாலிய திருஅவையின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ரூயினி, 2024 இல் இதய நோயும், 2025 இல் சிறுநீரக செயலிழப்பும் காரணமாக சிகிச்சை பெற்றிருந்தார். அவரது இறுதிச்சடங்கு ஜூன் 18 , வியாழனன்று வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

18 ஜூன் 2026, 08:03