வத்திக்கான் தோட்டத்திலுள்ள லூர்து அன்னை கெபியில் அமைதிக்காக ஜெபமாலை செபித்த திருத்தந்தை 14ஆம் லியோ வத்திக்கான் தோட்டத்திலுள்ள லூர்து அன்னை கெபியில் அமைதிக்காக ஜெபமாலை செபித்த திருத்தந்தை 14ஆம் லியோ  (@Vatican Media)

பகைமைச் சுவர்களைத் தகர்த்து அமைதியை உருவாக்க திருத்தந்தை அழைப்பு!

ஜெபமாலை வழியாக அமைதியின் ஊற்றான இயேசுவைத் தியானிக்கும் நாம், அமைதி என்பது வெறும் கற்பனையல்ல, அது நீதி, அன்பு மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமை என்பதை உணர வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வன்முறை, மோதல்கள் மற்றும் நிலையற்ற தன்மை நிறைந்த இவ்வுலகில், ஜெபமானது நம்பிக்கையின் ஊற்றாகவும், வரலாற்றில் கடவுள் நம்மை வழிநடத்தும் பிரசன்னத்தைக் கண்டறியும் வழியாகவும் மாறுகிறது என்றும், அன்னை மரியா நம்பிக்கைக்கும் கீழ்ப்படிதலுக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து, நம்பிக்கையாளர்கள் தங்கள் இதயங்களைக் கடவுளின் வார்த்தைக்கு எவ்வாறு திறக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 30, சனிக்கிழமையன்று, வத்திக்கான் தோட்டத்தில் இடம்பெற்ற ஜெபமாலை வழிபாட்டின் இறுதியில்  இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, மக்களுக்கு அமைதியை அருளும் கடவுளின் குரலுக்குக் கவனமுடன் செவிசாய்க்க நம்பிக்கையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

ஜெபமாலை வழியாகக் கிறிஸ்தவர்கள் உண்மையான அமைதியின் ஊற்றான இயேசுவைத் தியானிக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கடவுள் மனிதர்களைக் கைவிடாமல், வழிதவறியோரைத் தேடிச் சென்று தம் அன்பையும் மன்னிப்பையும் தருகிறார் என்றும், அமைதி என்பது வெறும் கற்பனையோ சுயநலமோ அல்ல; அது நீதி, அன்பு, மனிதநேயம் ஆகியவற்றின் அடிப்படையில் அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கடமையாகும் என்றும் வலியுறுத்தினார். 

போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி குழந்தைகள், குடும்பங்கள், கைதிகள், அகதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரின் துயரங்களும், அமைதியின் அவசரத் தேவையை உலகிற்கு நினைவூட்டுகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அமைதியாக விளங்கும் கிறிஸ்து, மனிதர்களைக் கடவுளோடு இணைத்து, பகைமை என்னும் சுவர்களைத் தகர்த்தெறிகிறார் என்றும் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்கள் உட்பட நம்முடைய சொல், செயல் என அனைத்திலும் வன்முறையைத் தவிர்த்து, அமைதியின் கருவிகளாக மாற நம்பிக்கையாளர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, உண்மையான அமைதி என்பது அன்பால் நிறைந்த இதயங்களில் தொடங்கி, மன்னிப்பு வழியாக வெளிப்பட்டு, பிறர் மீது காட்டும் இரக்க குணம் மூலம் பிரதிபலிக்கிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

இறுதியாக அன்னை மரியாவின் பரிந்துரையோடு, கிறிஸ்தவர்கள் கடவுளின் அழைப்பிற்குப் பதிலளித்து, தங்களது சொல்லாலும் செயலாலும் அமைதியை உருவாக்குபவர்களாக வாழ அழைக்கப்படுகிறார்கள் என்று கூறி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஜூன் 2026, 09:21