தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (AFP or licensors)

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்!

ஜூன் 8 திங்கள்கிழமை இன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் காலை மணி 9:30 க்கு தூதரக மையத்தில் ஸ்பெயின் நாட்டின் பிரதம மந்திரியைச் சந்திக்கிறார். காலை மணி 10:30 க்கு ஸ்பெயின் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். முற்பகல் மணி 11:30 க்கு தூதரக மையத்தில் ஸ்பெயின் ஆயர்களைச் சந்திக்கிறார்.

இம்மானுவேல் மரியான் – வத்திக்கான்  

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கான தனது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாளை இன்று ஜூன்  8 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கியிருக்கிறார்.

காலை மணி 9:30 க்கு தூதரக மையத்தில் ஸ்பெயின் நாட்டின் பிரதம மந்திரியைச் சந்திக்கிறார். பின்னர் காலை 10:30 மணிக்கு ஸ்பெயின் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். கத்தோலிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு திருத்தந்தை ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பின்னர் முற்பகல் மணி 11:30 க்கு தூதரக மையத்தில் ஸ்பெயின் ஆயர்களைச் சந்திக்கிறார். தொடர்ந்து மதியம் மணி 12:50 தூதரக மையத்தில் மதிய உணவு உண்கிறார்.

மாலை 6 மணிக்கு அல்முதேனாவின் புனித மரியாள் பேராலயத்தில் (Cathedral of Santa María la Real de la Almudena) வழிபாட்டில் பங்குகொண்டு உரையாற்றுகிறார்.

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மார்ட்ரிட் நகரின் இதயப்பகுதியில் அரச அரண்மனைக்கு எதிரே அமைந்துள்ள அல்முதேனா புனித மரியாள் பேராலயம் ஸ்பெயின் கத்தோலிக்க திருஅவையின் முக்கிய ஆன்மிக மையங்களில் ஒன்றாகும்.

1561 ஆம் ஆண்டில் மன்னர் இரண்டாம் பிலிப் மாட்ரிட்டை ஸ்பெயின் நாட்டின் தலைநகராக அறிவித்தபோதும் அந்த நகருக்கு தனித்த பேராலயம் இல்லை. பல நூற்றாண்டுகளாக தலைநகருக்குத் தகுந்த பேராலயத்தை அமைக்க வேண்டும் என்ற விருப்பம் நிலவியது. 1883 ஆம் ஆண்டு மன்னர் பன்னிரெண்டாம் அல்போன்சோ பேராலயத்தின் அடிக்கல்லை நாட்டினார். 1883-ல் தொடங்கிய கட்டுமானம் 1993-ல் மட்டுமே நிறைவடைந்தது. எனவே இது ஐரோப்பாவில் மிக நீண்ட காலம் கட்டப்பட்ட பேராலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அல்முதேனா பேராலயத்தின் தனிச்சிறப்பு அதன் கலப்பு கட்டிடக்கலை ஆகும். வெளிப்புறம்  நியோகிளாசிக்கல் (Neo-classical) உள்ளகம் நியோகோதிக் (Neo-Gothic) அடிக்கோயில்  நியோரோமானஸ்க் (Neo-Romanesque) கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இதனால் பல நூற்றாண்டுகளின் கலை மற்றும் கட்டிட மரபுகள் ஒரே ஆலயத்தில் இணைந்துள்ளன.

"அல்முதேனா" என்ற பெயர் அரபு மொழிச் சொல்லான அல்-முதைனா" என்பதிலிருந்து வந்தது. அதற்கு "பாதுகாக்கப்பட்ட நகரம்" என்று பொருள். 1908 ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் அல்முதேனா புனித மரியாவை நகரின் அதிகாரப்பூர்வ பாதுகாவலராக அறிவித்தார்.

8-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய படையெடுப்புகள் ஏற்பட்டபோது கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவின் திருவுருவத்தை நகர மதிலுக்குள் மறைத்து வைத்ததாக மரபு கூறுகிறது. 1085 ஆம் ஆண்டு மன்னர் ஆறாம் அல்போன்சோ மாட்ரிட்டை மீண்டும் கைப்பற்றியபின் அந்த திருவுருவத்தைக் கண்டுபிடிக்க மக்கள் செபித்தனர். அப்போது நகர மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து அதன் உள்ளே மறைக்கப்பட்டிருந்த அன்னையின் திருவுருவம் வெளிப்பட்டதாகவும் அருகில் இருந்த விளக்குகள் இன்னும் எரிந்துகொண்டிருந்ததாகவும் மரபு தெரிவிக்கிறது. இது அல்முதேனா அன்னையின் முதல் பெரிய அற்புதமாகக் கருதப்படுகிறது.

மற்றொரு மரபுப்படி ஒரு முற்றுகைக் காலத்தில் நகர மக்கள் பசியால் வாடியபோது அன்னையின் பரிந்துரையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தானியக் களஞ்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் மக்கள் உயிர் பிழைத்தனர். இந்த நிகழ்வு இன்று வரை அன்னையின் தாய்மையான பாதுகாப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

மதிலுக்குள் மறைக்கப்பட்டிருந்த அல்முதேனா அன்னையின் திருவுருவம் வெளிப்பட்டதுபோல்இ இறைவனின் அருளும் சரியான நேரத்தில் மனித வாழ்வில் வெளிப்படுகிறது" என்பது இந்தப் பேராலயத்தின் மைய ஆன்மிகச் செய்தியாகும்.

இறுதியாக இரவு 7 மணிக்கு சாண்டியாகோ பெர்னாவியூ மைதானத்தில் மறைமாவட்ட மக்களைச் சந்தித்து இன்றைய நாளுக்கான தனது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

08 ஜூன் 2026, 14:30